Breaking News
3 நாடுகள் தொடரில் பங்கேற்க ஜெர்மனி புறப்பட்டது இந்திய ஹாக்கி அணி

3 நாடுகள் ஹாக்கி தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய ஆடவர் நேற்று ஜெர்மனி புறப்பட்டுச் சென்றது.

3 நாடுகள் ஹாக்கி தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி ஜெர்மனி யின் டியூஸெல்டார்ப் நகரில் நடைபெறுகிறது. இதில் ஜெர்மனி, இந்தியா ஆகிய அணிகளுடன் 3-வது நாடாக பெல்ஜியம் கலந்து கொள்கிறது. இதில் பங்கேற்கும் மன்பிரித் சிங் தலைலையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி நேற்று காலை பெங்களூருவில் உள்ள கேம்பேகவுடா சர்தேச விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி புறப்பட்டுச் சென்றது.

3 நாடுகள் தொடரில் இந்திய அணி ஜெர்மனி, பெல்ஜியத்துக்கு எதிராக தலா இரு ஆட்டங்களில் மோத உள்ளன. இந்த தொடர் குறித்து மன்பிரித் சிங் கூறும்போது, “ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஜெர்மனி, பெல்ஜியம் அணிகளுக்கு எதிரான இந்த தொடரானது அடுத்து லண்டனில் நடைபெற உள்ள உலக ஹாக்கி லீக் அரை இறுதிக்கு சிறந்த முறையில் தயார் ஆகுவதற்கு எங்களுக்கு உதவியாக இருக்கும்.

3 நாடுகள் தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடினால் அது எங்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

இது எங்களது ஆட்டத்தில் சிறிய மாற்றங்களை செய்து கொள்ளவும், தவறு செய்யாமல் இருக்கவும் உதவும். மேலும் எங்களது செயல் திறனை மதிப்பீடு செய்ய முடியும் மற்றும் பெரிய சவாலான உலக ஹாக்கி லீக் அரை இறுதிக்கு தயாராகுவோம்.

மதிப்பு மிகுந்த இந்த தொடர் உலக கோப்பைக்கு தகுதி பெறும் தொடராகவும் அமைந்துள்ளது. எந்த அணியையும் நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். எங்களது நோக்கமே தொடரை வெற்றியுடன் தொடங்குவதுதான்” என்றார்.

3 நாடுகள் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணி அதை தொடர்ந்து லண்டனில் 15-ம் தேதி தொடங்கும் உலக ஹாக்கி லீக் அரை இறுதி தொடரில் கலந்து கொள்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஜூன் 9-ம் தேதி லண்டன் சென்றடைகிறது. அங்கு அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

உலக ஹாக்கி லீக் அரை இறுதி தொடரில் இந்திய அணி தனது ஆட்டத்தில் ஜூன் 15-ம் தேதி ஸ்காட்லாந்துடன் மோதுகிறது. இதை தொடர்ந்து 17-ம் தேதி கனடா, 18-ம் தேதி பாகிஸ்தான், 20-ம் தேதி நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் விளையாடுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.