ட்விட்டர் தளத்திலிருந்து வெளியேறினார் ராம் கோபால் வர்மா
ட்விட்டர் தளத்தில் பெரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வந்த ராம் கோபால் வர்மா தனது கணக்கை நீக்கிவிட்டார்.
சமூகவலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் கடும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பவர் ராம் கோபால் வர்மா. ரஜினி, பவன் கல்யாண், டைகர் ஷெராஃப், சன்னி லியோன், ஸ்ரீதேவி உள்ளிட்ட பலரை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக அவ்வப்போது விமர்சித்து வந்தார். எவ்வளவு பெரிய சர்ச்சை உண்டானாலும், தொடர்ச்சியாக விமர்சித்தே வந்தார்.
சமீபத்தில் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார் 3’. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் தோல்வியை தழுவியது. தற்போது ‘கன்ஸ் அண்ட் தைஸ்’ என்ற பெயரில் இணையத் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். மும்பை மாஃபியாக்களை பின்னணியாக கொண்டு வெளியாகும் இந்தத் தொடரின் ட்ரெய்லரும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது ட்விட்டர் பக்கத்திலிருந்து விலகியுள்ளார் ராம் கோபால் வர்மா. இனிமேல் புகைப்படம் மற்றும் வீடியோ வடிவில் இஸ்டாகிராமில் மட்டுமே இடம்பெறவிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
தனது கடைசி ட்வீட்டாக “ஓர் இனிமையான அறிவிப்பு. நான் ட்விட்டரில் இருந்து வெளியேறுகிறேன் என்பதை என்னைப் பின் தொடர்பவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு ஆண்டுகளாக என்னைப் பின் தொடர்ந்ததற்காக நன்றியெல்லாம் சொல்லப்போவதில்லை. எனது ட்விட்டர் மரணத்துக்கு முன்னால் கடைசி ட்வீட் இது. ஆனால் நான் இளைப்பாறிவிடமாட்டேன். எனது பணியை தீவிரப்படுத்தவுள்ளேன். @RGVzoomin தோற்றம்: 27/5/2009 மறைவு:27/5/2017” என்று தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.
சமீபத்தில் முன்னணி பாடகர் சோனு நிகம் ட்விட்டர் பக்கத்திலிருந்து வெளியேறினார். மேலும், ஷீலா ரஷீத்தை பற்றிய கருத்தால், அபிஜீட் பட்டாச்சார்யாவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.