தென் ஆப்பிரிக்கா பெற்றது ஆறுதல் வெற்றியல்ல; இங்கிலாந்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
லார்ட்ஸில் நேற்று நடைபெற்ற 3-வது, இறுதி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை தென் ஆப்பிரிக்கா அணி வீழ்த்திய விதம் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக இங்கிலாந்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும்.
தொடரை இங்கிலாந்து 2-1 என்று கைப்பற்றினாலும் சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து அணி 20 ரன்களுக்கு ரபாடா, பார்னெல் வேகத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமல் 6 விக்கெட்டுகளை இழந்தது ஒரு பெரும் பின்னடைவே. அதன் பிறகு ஜானி பேர்ஸ்டோ, டி.ஜே.வில்லே ஸ்கோரை 82 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். கடைசியில் அறிமுக வீரர் ரோலண்ட் ஜோன்ஸ் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 37 பந்துகளில் 37 ரன்களை எடுக்க இங்கிலாந்து ஓரளவுக்கு மரியாதைக்குரிய 153 ரன்களை எட்டியது.
பெரும்பாலும் மணிக்கு 150 கிமீ வேகம் வீசிய ரபாடா 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வெய்ன் பார்னெல் 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இடது கை ஸ்பின்னர் மஹராஜ் 3 விக்கெட்டுகளை சிக்கனமாக வீசி கைப்பற்றினார்.
எனவே வலது கை இடது கை வேகப்பந்து வீச்சு, இடது கை ஸ்பின் ஆகியவற்றுக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங் சாயம் வெளுத்ததே நேற்று இங்கிலாந்துக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகும்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் 5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை ஒரு அணி இழப்பது இதுவே முதல் முறை.
மேலும் இதற்கு முன்பாக 8 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக இங்கிலாந்து வென்றது அதன் பவர் ஹிட்டிங் மற்றும் பயமற்ற அணுகுமுறையால்தான். கடைசி 11 ஆட்டங்களில் இங்கிலாந்து முதலில் பேட் செய்தவரையில் ஒரேயொரு முறை மட்டுமே 300 ரன்களை எட்டவில்லை.
கேகிசோ ரபாடாவின் சிறப்பம்சம் என்னவெனில் வேகத்தை விட்டுக் கொடுக்காத கட்டுக்கோப்பு, அளவு மற்றும் திசையில் துல்லியம் ஆகியவையாகும். இங்கிலாந்துக்கு ஏன் எச்சரிக்கை மணி எனில், பவுலர்களுக்கு லேசாக சாதகச் சூழல் இருந்தவுடனேயே அதன் ஆக்ரோஷம் மண்ணோடு மண்ணானது என்பதே. சூழலுக்கேற்ப இங்கிலாந்தின் ‘பயமற்ற பேட்டிங் வரிசை’ தகவமைத்துக் கொள்ளவில்லை.
அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர், அடில் ரஷீத் ஆகியோர் பெரிய டிரைவ்களை ஆடப்போய் ரபாடாவிடம் வீழ்ந்தனர். மூவருமே லேசாக பந்து ஸ்விங் ஆனதில் காலியாகினர். வெய்ன் பார்னெலும் நல்ல உத்வேகத்துடன் வீசி ஜோ ரூட்டை வீழ்த்தினார். வாசிம் அக்ரம் பந்து போல் உள்ளே ஸ்விங் ஆன பந்தில் ரூட் எல்பி ஆனார். மோர்கனும் பார்னெல் வீசிய லேசான ஸ்விங் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார். உள்நாட்டில ஆடினாலும் நல்ல பந்து வீச்சுக்கு எதிராக இங்கிலாந்து பலவீனமான அணியே என்பது இந்த ஆட்டத்தின் மூலம் அந்த அணிக்குப் புரியவந்திருக்கும்.
20/6 என்ற நிலையில் ஆகக்குறைந்த ஸ்கோரில் இங்கிலாந்து காலாவதியாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜானி பேர்ஸ்டோ டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது போல் ஆடி 67 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 51 ரன்களையும் டி.ஜே.வில்லே 39 பந்துகளில் 26 ரன்களையும் எடுத்து கொஞ்சம் உயிர் கொடுத்தனர்.
ஆனால் வில்லே எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் கொடுத்தும், பேர்ஸ்டோ ஸ்டம்ப்டு ஆகவும் அறிமுக வீரர் ரோலண்ட் ஜோன்ஸ் இங்கிலாந்து இன்னிங்ஸின் ஒரே சிக்சரை அடித்தார், கிறிஸ் மோரிசை அவர் புல் ஷாட்டில் சிக்ஸ் அடித்தார். பிறகு கிறிஸ் மோரிசை அவர் ஒரு மிகப்பெரிய ஆன் டிரைவ் அடித்தார்.
ஆனால் தென் ஆப்பிரிக்கா தொடரை இழந்ததன் கோபம் கிறிஸ் மோரிசிடம் வெளிப்பட்டது, அறிமுக வீரர் ரோலண்ட் ஜோன்ஸ் ஹெல்மெட்டை பவுன்சரில் பதம் பார்த்தார்.
இவர் நன்றாக ஆடி வந்த போது பால் ஒரு பந்தை பவுண்டரிக்கு விரட்டி அடுத்த மஹராஜ் பந்தை அசிங்கமாக ஸ்லாக் செய்ய முயன்று பவுல்டு ஆனார். இங்கிலாந்து 32-வது ஓவரில் 153 ரன்களுக்குச் சுருண்டது.
இலக்கை தென் ஆப்பிரிக்கா துரத்திய போது டி காக், ஆம்லா ஜோடி 15 ஓவர்களில் 95 ரன்களைச் சேர்த்தனர். ஆம்லா குறைந்த இன்னிங்ஸ்களில் 7,000 ஒருநாள் ரன்களைக் குவித்து சாதனை புரிந்தார்.
ஆனால் தென் ஆப்பிரிக்காவின் பலவீனமும் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. தெ.ஆ. அணி 95 ரன்களில் இருந்த போது 54 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்த ஆம்லா பவுல்டு ஆனார். அறிமுக வீரர் ரோலண்ட் ஜோன்ஸ் இவர் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
அடுத்ததாக உடனேயே டி காக் 34 ரன்களில் பால் பந்தில் பவுல்டு ஆனார்.ஸ்கோர் 101 ரன்களை எட்டிய போது டுபிளெசிஸ் 5 ரன்களில் வெளியேறினார். ஆகவே 6 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா, கடைசியில் டுமினி 28 ரன்களயும், டிவில்லியர்ஸ் 27 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு இட்டுச் சென்றனர். 28.5 ஓவர்களில் 156/3 என்று தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இங்கிலாந்துக்கு ரோலண்ட்-ஜோன்ஸ் என்ற புதிய ஆல்ரவுண்டர் கிடைத்துள்ளார். ஆட்ட நாயகனாக ரபாடா தேர்வு செய்யப்பட தொடர் நாயகனாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து முதல் வரிசை பேட்ஸ்மென்களின் பலவீனத்தை எடுத்துக் காட்டியுள்ளது, இதனை மற்ற அணிகளும் சாம்பியன்ஸ் கோப்பையில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. அதே போல் கோப்பையை வெல்வதாக கருதப்படும் தென் ஆப்பிரிக்க அணியின் பலவீனத்தையும் இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி பயன்படுத்திக் கொண்டது.
எனவே சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக இங்கிலாந்து வீரர்களின் மனதில் நேற்று தோற்ற விதம் நிலைகொண்டிருக்கும், இதனை மற்ற அணிகள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பொருளில் தென் ஆப்பிரிக்கா பெற்றது ஆறுதல் வெற்றியல்ல, முக்கியமான வெற்றியே.