விமானம் வாங்கியதில் முறைகேடு; சி.பி.ஐ., மூன்று வழக்குகள் பதிவு
ஏர் இந்தியா’ விமான நிறுவனம், 111 விமானங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ., நேற்று வழக்கு பதிவு செய்துள்ளது.
சி.பி.ஐ., செய்தித் தொடர்பாளர், ஆர்.கே.கவுர், டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, ‘இந்தியன் ஏர்லைன்ஸ் – ஏர் இந்தியா’ ஆகிய விமான சேவை நிறுவனங்கள் இணைக்கப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்தன.
இணைப்பு நடவடிக்கைகள் நடந்த சமயத்தில், 111 விமானங்கள் வாங்கப்பட்டன. லாபகரமான விமான வழித்தடங்கள், உள்நாடு மற்றும் சர்வதேச தனியார் விமான சேவை நிறுவனங்களுக்கு சாதகமாக விட்டுத் தரப்பட்டன. இந்த நடவடிக்கைகளால், மத்திய அரசுக்கு, பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக, சிவில் விமானப் போக்குவரத்து துறையைச் சேர்ந்த, பெயர் குறிப்பிடாத அதிகாரிகளுக்கு எதிராக, எப்.ஐ.ஆர்., எனப்படும், மூன்று முதல் தகவல் அறிக்கைகளை, சி.பி.ஐ., பதிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.