மங்கோலியா போட்டியில் களமிறங்கும் மேரி கோம்
மங்கோலியாவில் நடைபெற உள்ள உலான்பாத்தர் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் ஆடவர் பிரிவில் தேவேந்திர சிங் உள்ளிட்ட 7 வீரர்களும், மகளிர் பிரிவில் மேரி கோம் உள்ளிட்ட 3 வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர்.
உலான்பாத்தர் கோப்பைக் கான குத்துச்சண்டை போட்டி மங்கோலியா தலைநகரான உலான்பாத்தரில் வரும் 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் காமன்வெல்த் போட்டி மற்றும் ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேவேந்திர சிங் 52 கிலோ எடைப் பிரிவில் களமிறங்குகிறார்.
ஒலிம்பிக்கில் இருமுறை பங்கேற்றுள்ள அவர் இம்முறை லைட் பிளைவெயிட் பிரிவில் இருந்து பிளைவெயிட் பிரிவுக்கு மாறி உள்ளார். கிங்ஸ் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்ற ஷியாம் குமார் (49 கிலோ எடைப் பிரிவு), பல்கேரியாவில் நடைபெற்ற ஸ்ட்ராண்ட்ஜா நினைவுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முகம்மது ஹஸ்முதின் (56 கிலோ எடைப் பிரிவு), ஆசிய இளைஞர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அங்குஷ் தகியா (லைட் வெயிட் பிரிவு), கிங்ஸ் கோப்பையில் வெண்கலப் பதக்கம் வென்ற ரோஹித் தோகாஸ் (64 கிலோ எடைப் பிரிவு), துர்யோதனன் (69 கிலோ எடைப் பிரிவு), ஜெய்தீப் (75 கிலோ எடைப் பிரிவு) ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
மேரி கோம்
மகளிர் பிரிவில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் (51 கிலோ எடைப் பிரிவு) களமிறங்குகிறார். கடந்த ஓராண்டு காலமாக எந்தவித போட்டியிலும் களமிறங்காத நிலையில் இந்த தொடரை மேரி கோம் சந்திக்க உள்ளார். அவருடன் பிரியங்கா சவுத்ரி (60 கிலோ எடைப் பிரிவு), கலாவந்தி (75 கிலோ எடைப் பிரிவு) ஆகியோரும் களமிறங்குகின்றனர்.