சாம்பியன்ஸ் டிராபி 2017: களத்தில் குதிக்கும் 8 அணிகள்
தென் ஆப்ரிக்கா | தரவரிசை: 1 | சிறந்த முடிவு: 1998-ல் சாம்பியன்
கடந்த முறை: அரை இறுதி
அணி: டி வில்லியர்ஸ் (கேப்டன்), ஹசிம் ஆம்லா, பர்ஹான் பெகார்டியன், டுமினி, குயிண்டன் டி காக், டு பிளெஸ்ஸிஸ், கேசவ் மகாராஜ், டேவிட் மில்லர், மோர்ன் மோர்க்கெல், கிறிஸ் மோரிஸ், வெயின் பார்நெல், அன்டில் பெலுக்வயோ, டுவைன் பிரிட்டோரியஸ், காகிசோ ராபாடா, இம்ரன் தகிர்.
பயிற்சியாளர்: ரஸ்ஸல் டோமிங்கோ
கடந்த இரு ஆண்டுகளாக இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் போட்டி தொடரை வென்று தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
2015-ம் ஆண்டு ஜூலை முதல் ஒருநாள் போட்டி தொடரை இழக்காமல் இருந்து வந்த தென் ஆப்ரிக்க அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்துக்கு எதிராக நடத்தப்பட்ட 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என இழந்தது. பெரிய அளவிலான தொடர்களில் முக்கியமான கட்டங்களில் தென் ஆப்ரிக்க அணி தடுமாறி உள்ளது. இம்முறை அந்த அணி அழுத்தத்தை சமாளிக்க, ஒவ்வொரு துறையிலும் சிறந்த வீரர்களுடன் மன வலிமையை நிரூபிக்கும் பட்சத்தில் வெற்றி சாத்தியப்படும்.
பேட்டிங்கில் குயிண்டன் டி காக், ஹசிம் ஆம்லா, டி வில்லியர்ஸ், டுபிளெஸ்ஸிஸ், டுமினி, டேவிட் மில்லர் அசத்த தயாராக உள்ளனர். பந்து வீச்சில் ரபாடா, இம்ரன் தகிர் நல்ல பார்மில் உள்ளனர்.
ஆட்டங்கள்: ஜூன் 3 v இலங்கை, லண்டன்; ஜூன் 7 v பாகிஸ்தான், பர்மிங்காம்; ஜூன் 11 v இந்தியா, லண்டன்.
ஆஸ்திரேலியா | தரவரிசை: 2 | சிறந்த முடிவு: 2006, 2009-ல் சாம்பியன்
கடைசி முறை: லீக் சுற்றுடன் வெளியேற்றம்
அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், ஆரோன் பின்ச், ஜான் ஹஸ்டிங்ஸ், ஜோஸ் ஹசல்வுட், டிரெவிஸ் ஹெட், ஹென்ரிக்ஸ், கிறிஸ் லின், மேக்ஸ்வெல், ஜேம்ஸ் பேட்டின்சன், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், ஆடம் ஸம்பா.
பயிற்சியாளர்: டேரன் லெமன்
2013-ல் கோப்பையை தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலையில் தற்போது மீண்டும் கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்குகிறது. பேட்டிங்கில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், மேக்ஸ்வெல், கிறிஸ் லின் என பெரிய படை உள்ளது.
வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஜோசஸ் ஹசல்வுட், பேட்டின்சன், பாட் கம்மின்ஸ் கூட்டணி எதிரணிகளை மிரட்ட தயாராக உள்ளது. சீரான வேகம், ஸ்விங் பந்து வீச்சுகள் இங்கிலாந்து ஆடுகளங்களில் நன்கு எடுபடும் என்பதால் இந்த வேகக்கூட்டணி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
2006 மற்றும் 2009-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற அணியில் விளையாடிய எந்த வீரர்களும் தற்போது அணியில் இல்லை. ஆனால் 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடிய 7 வீரர்கள் தற்போது அணியில் உள்ளனர்.
கடந்த காலங்களில் உள்ளதை போன்று தற்போதைய ஆஸ்திரேலிய அணி ஆதிக்கவாதி யான அணியாக இல்லை. கடைசியாக அந்த அணி தென் ஆப்ரிக்கா, நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழந்திருந்தது.
ஆட்டங்கள்: ஜூன் 2 v நியூஸிலாந்து, எட்ஜ்பஸ்டன்; ஜூன் 5 v வங்கதேசம், ஓவல்; ஜூன் 10 v இங்கிலாந்து, எட்ஜ்பஸ்டன்.
இந்தியா | தரவரிசை: 3 | சிறந்த முடிவு: 2002-ல் கூட்டு சாம்பியன், 2013-ல் சாம்பியன்
கடந்த முறை: சாம்பியன்
அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.
பயிற்சியாளர்: அனில் கும்ப்ளே
அனுபவ வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் உள்ளது. 2013-ல் பட்டம் வென்ற அணியில் இடம் பெற்றிருந்த அஸ்வின், ஷிகர் தவண், தோனி, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ரோஹித் சர்மா, உமேஷ் யாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இம்முறையும் விளையாடுகின்றனர்.
2006-ம் ஆண்டுக்கு பின்னர் யுவராஜ் சிங் இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ளார். கடந்த முறை நடைபெற்ற தொடரில் சிறந்த பேட்ஸ்மேன் விருதை வென்ற ஷிகர் தவண் மீண்டும் ஒரு நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறார்.
ஐசிசி தொடரை முதன்முறையாக விராட் கோலி கேப்டனாக எதிர்கொள்கிறார். தோனியின் அனுபவத்தை கொண்டு கோலி இந்த தொடரை வென்றெடுக்க முயல்வார். வேகப் பந்து வீச்சில் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை தீப்பொறி பறப்பதாக உள்ளது. முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளனர்.
ஆட்டங்கள்: ஜூன் 4 v பாகிஸ்தான், எட்ஜ்பஸ்டன்; ஜூன் 8 v இலங்கை, லண்டன்; ஜூன் 11 v தென் ஆப்ரிக்கா, லண்டன்.
நியூஸிலாந்து | தரவரிசை: 4 | சிறந்த முடிவு: 2000-ல் சாம்பியன்
கடந்த முறை: லீக் சுற்றுடன் வெளியேற்றம்
அணி: வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், ஜிம்மி நீஷாம், ராஸ் டெய்லர், ஜீத்தன் படேல், கோரே ஆண்டர்சன், டாம் லதாம், லூக் ரான்ஜி, டிரென்ட் போல்ட், மிட்செல் மெக்லீனகன், மிட்செல் சான்ட்னர், நீல் புரூம், ஆடம் மில்னே, டிம் சவுத்தி, காலின் டி கிராண்ட் ஹோம்.
பயிற்சியாளர்: மைக் ஹெஸ்ஸன்
ஐசிசி நடத்தும் தொடர்களில் நியூஸிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபியை மட்டுமே வென்றுள்ளது. 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கோப்பை வெல்ல ஆயத்தமாகி உள்ளது.
ஆல்ரவுண்டர்கள் அதிகம் நிறைந்த அணியாக நியூஸிலாந்து உள்ளது. மார்ட்டின் கப்திலுடன் தொடக்க வீரராக யாரை களமிறக்குவது என்பதில் குழப்பம் உள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தொடரில் தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட டாம் லதாம் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை.
ஆனால் கடந்த வாரம் அயர்லாந்தில் நடைபெற்ற 3 நாடுகள் தொடரில் அவர், ஒரு சதம், 2 அரை சதங்கள் அடித்தார். இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட லூக் ரான்ஜி 66 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் இவர் மட்டுமே சோபித்திருந்தார்.
2009-ல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூஸிலாந்து அணியில் விளையாடிய ராஸ் டெய்லரின் அனுபவம் பெரிதும் உதவுக்கூடும். கடந்த ஆண்டு அணியில் இடம் பெற்றிருந்த 7 வீரர்கள் இம்முறையும் விளையாடுகின்றனர்.
ஆட்டங்கள்: ஜூன் 2 v ஆஸ்திரேலியா, பர்மிங்காம்; ஜூன் 6 v இங்கிலாந்து, கார்ட்டிப்; ஜூன் 9 v வங்கதேசம், கார்டிப்.
இங்கிலாந்து | தரவரிசை: 5 | சிறந்த முடிவு: 2004, 2013-ல் இறுதிப் போட்டி வரை முன்னேற்றம்
கடந்த முறை: இறுதிப் போட்டி வரை
அணி: மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோவ், ஜேக் பால், ஷேம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், லயிம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.
பயிற்சியாளர் : டிரெவர் பேலிஸ்
கடந்த இரு ஆண்டுகளாக இங்கிலாந்து அணி குறுகிய வடிவிலான போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. உலகத் தரம் வாய்ந்த வீரர்களாக மோர்கன், ஜோ ரூட், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் திகழ்கின்றனர். 7-வது இடத்தில் களமிறங்கும் மொயின் அலி, பின்கள பேட்டிங்கில் வலுசேர்க்கக்கூடியவராக உள்ளார். பந்து வீச்சிலும் அந்த அணி சமபலம் வாய்ந்ததாக உள்ளது.
42 வருடங்களாக பெரிய அளவிலான தொடரில் கோப்பையை வெல்ல முடியாமல் உள்ள சோகத் துக்கு இம்முறை சொந்த மண்ணில் தீர்வு காணும் முனைப்பில் உள்ளது. உள்ளூர் சாதகத்துடன் முதன்முறையாக மகுடம் சூடும் கனவில் இந்த தொடரை அணுகுகிறது.
ஆட்டங்கள்: ஜூன் 1 v வங்கதேசம், லண்டன்; ஜூன் 6 v நியூஸிலாந்து, லண்டன்; ஜூன் 10 v ஆஸ்திரேலியா, பர்மிங்காம்.
வங்கதேசம் | தரவரிசை: 6 | சிறந்த முடிவு: 2002, 2004-ல் லீக் சுற்றுடன் வெளியேற்றம்
கடந்தமுறை: தகுதி பெறவில்லை
அணி: மஷ்ரஃப் மோர்டசா (கேப்டன்), இம்ருல் கெய்ஸ், மஹ்மதுல்லா, மெகதி ஹசன் மிராஜ், மோசடெக் ஹோசைன், முஸ்பிஹூர் ரகிம், முஸ்டாபிஸூர் ரஹ்மான், ரூபல் ஹோசைன், சன்ஜாமுல் இஸ்லாம், சபிர் ரஹ்மான், ஷபியுல் இஸ்லாம், ஷாகிப் அல்-ஹசன், சவுமியா சர்க்கார், தமிம் இக்பால், தஸ்கின் அகமது.
பயிற்சியாளர் : சண்டிகா ஹத்துருசிங்கா
வங்கதேச அணி பெரிய அளவிலான தொடர் களில் கோப்பையை வெல்லக் கூடிய அணியாக இல்லாவிட்டாலும் பல முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வந்துள்ளது.
கடைசியாக சாம்பியன்ஸ் டிராபியில் 2006-ல் பங்கேற்றது. அந்த அணி கடந்த சில ஆண்டுகளாக சீரான முன்னேற்றம் அடைந்து வருகிறது. 2015 உலகக் கோப்பையில் கால் இறுதி வரை முன்னேறிய வங்கதேச அணி அதன் பின்னர் தனது சொந்த மண்ணில் பாகிஸ்தான், இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர்களை வென்றுள்ளது.
ஆட்டங்கள் : ஜூன் 1 v இங்கிலாந்து, ஓவல்; ஜூன் 5 v ஆஸ்திரேலியா, ஓவல்; ஜூன் 9 v நியூஸிலாந்து, கார்டிப்
இலங்கை | தரவரிசை: 7 | சிறந்த முடிவு: 2002-ல் கூட்டு சாம்பியன்
கடந்த முறை: அரை இறுதி வரை முன்னேற்றம்
அணி: ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெலா, அசெலா குணரத்னே, சமரா கபுகேதரா, நூவன் குலசேகரா, சுரங்கா லக்மல், மலிங்கா, குசால் மென்டிஸ், நூவன் பிரதீப், சீக்குகே பிரசன்னா, குசால் பெரேரா, திசரா பெரேரா, சந்தகன், உபுல் தரங்கா.
பயிற்சியாளர் : கிரஹாம் ஃபோர்டு
இலங்கை அணியில் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், வேகப் பந்து வீச்சாளர் மலிங்கா ஆகியோர் நீண்ட இடைவேளைக்கு பிறகு களமிறங்குகின்றனர். இவர்களை தவிர சந்திமால், குசால் பெரேரா, நூவன் குலசேகரா, திஷாரா பெரரோ ஆகியோரும் கடந்த முறை நடைபெற்ற தொடரில் பங்கேற்றுள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு சிறப்பு பயிற்சிகள் வழங்கி உள்ளார். பேட்டிங்கில் சமர கபுகேதரா, உபுல் தரங்கா, நிரோஷன் திக்வெலா, குணரத்னே நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர்.
ஆட்டங்கள் : ஜூன் 3 v தென் ஆப்ரிக்கா, லண்டன்; ஜூன் 8 v இந்தியா, லண்டன்; ஜூன் 12 பாகிஸ்தான், கார்டிப்.
பாகிஸ்தான் | தரவரிசை: 8 | சிறந்த முடிவு: 2000, 2004, 2009-ல் அரை இறுதி வரை முன்னேற்றம்
கடந்த முறை: லீக் சுற்றுடன் வெளியேற்றம்
அணி: சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), அகமது ஷேசாத், அசார் அலி, பாபர் அசாம், பாஹிம் அஸ்ரப், பஹர் ஜமான், ஹசன் அலி, இமாத் வாசிம், ஜூனைத் கான், முகமது அமிர், முகமது ஹபீஸ், ஷதப் கான், ஷோயிப் மாலிக், உமர் அக்மல், வகாப் ரியாஸ்.
பயிற்சியாளர் : மிக்கி ஆர்தர்
பழமைவாத நோக்குடன் செயல்படும் பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் இருந்து அடுத்து கட்டத்துக்கு செல்ல வேண்டுமானால் தனது கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
சர்ப்ராஸ் அகமது கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு அணிக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது. சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியிருந்தது.
பேட்டிங்கில் ஷோயிப் மாலிக், முகமது ஹபீஸ் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர். பந்து வீச்சில் முகமது அமீர், வகாப் ரியாஸ், ஜூனைத் கான், ஷதப் கான் நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளனர்.
ஆட்டங்கள் : ஜூன் 4 v இந்தியா, பர்மிங்காம், ஜூன் 7 v தென் ஆப்ரிக்கா, பர்மிங்காம்; ஜூன் 12 v இலங்கை, கார்டிப்.