‘மத்திய அரசின் புது விதிமுறை; இடைத்தரகர் ஆதிக்கம் குறையும்’
கால்நடைகள் விற்பனை தொடர்பாக, மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இது குறித்து பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், இடைத்தரகர்களின் ஆதிக்கம் குறையும் என, கூறப்படுகிறது.
விலங்கு நல ஆர்வலரான அருண் பிரசன்னா, தமிழக கால்நடை துறையில், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு செய்து, பெறப்பட்ட தகவல் குறித்து கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, 100 கால்நடை சந்தைகள் மூலம், வாரத்திற்கு, 53 ஆயிரம் கால்நடைகள் விற்பனையாவதாக, கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு கால்நடையின் விலை, 15 ஆயிரம் ரூபாய் என கணக்கிட்டால், ஆண்டுக்கு, 26 லட்சம் கால்நடைகள் விற்பனை மூலம், தமிழகத்தில் மட்டும், 4,160 கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது.அதில், இடைத்தரகர்கள் அதிக விலைக்கு கால்நடைகளை வாங்கி, இறைச்சிக்காகவும், தோல் பொருட்கள் தயாரிப்புக்காகவும், மிக அதிக விலைக்கு விற்று லாபம் பெறுகின்றனர்.
இடைத்தரகர்களுடன், விவசாயிகளால் போட்டி போட்டு, கால்நடைகளை வாங்க முடிவதில்லை. இந்த இடைத்தரகர்கள் தான், அனைத்து வித கொடூர செயல்களுக்கும் காரணம். மத்திய அரசின் புதிய விதிமுறைகளால், இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவர். வர்த்தகர்கள், விவசாயிகளை தேடி செல்வதால், அவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும், என்றார்.