500 கோடி ரூபாய் கேட்டு விப்ரோ நிறுவனத்துக்கு மிரட்டல்
பெங்களூரில் பிரபல, ஐ.டி., நிறுவனமான விப்ரோவுக்கு, 500 கோடி ரூபாய் கேட்டு, மீண்டும் ‘இ – மெயில்’ மிரட்டல் வந்துள்ளது.
பெங்களூரு விப்ரோ நிறுவனத்துக்கு, மே, 5ல், மர்ம நபர் ஒருவரிடமிருந்து, ‘இ – மெயிலில்’ மிரட்டல் வந்தது. அதில், ‘500 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்; இல்லையெனில், பயங்கர பின்விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக, பெல்லந்துார் காவல் நிலையத்தில், புகார் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. நிறுவனத்தின் சுற்றுப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும், ‘இ – மெயில்’ மூலம், மற்றொரு மிரட்டல் வந்துள்ளது. இதில், ’72 மணி நேரத்தில், 500 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால், உங்கள் அலுவலகத்தில் பயங்கரவாத சம்பவம் அரங்கேறும்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான புகாரை, சைபர் கிரைம் போலீசாருக்கு, பெல்லந்துார் போலீசார் அனுப்பினர். இந்த மிரட்டலால், எலக்ட்ரானிக் சிட்டியிலுள்ள, ஐ.டி.,-பி.டி, நிறுவனங்கள் அச்சமடைந்துள்ளன.
விப்ரோ நிறுவனத்தின் மாஜி ஊழியர் அல்லது தற்போது பணியாற்றி வரும் ஊழியர்கள் யாராவது இது போன்று செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். இரு மிரட்டல்களும், ஒரே ‘இ – மெயில் ஐ.டி.,’யிலிருந்து வந்திருப்பதையும், சுவிட்சர்லாந்தின், ஐ.பி., முகவரி என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.