ஆயத்தஆடைகளுக்கு ஜி.எஸ்.டி., : ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு
ஆயத்த ஆடை மற்றும் ஆடை உற்பத்தி மூலப்பொருட்களுக்கான வரி விகிதங்களை, ஜி.எஸ்.டி., கவுன்சில், நேற்று முன்தினம் வெளியிட்டது. இது குறித்து, இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தென் மண்டல தலைவர், சக்திவேல் கூறியதாவது: ஆயத்த ஆடைகளுக்கு, குறைந்தபட்ச வரி விதிக்க வேண்டுமென, ‘பியோ’ தரப்பில், அனைத்து மாநில நிதித் துறை அமைச்சர்களிடமும், ஜி.எஸ்.டி., கவுன்சிலிடமும் வலியுறுத்தி வந்தோம். இதை, ஜி.எஸ்.டி., கவுன்சில் நிறைவேற்றி வைத்துள்ளது. 1,000 ரூபாய்க்கு கீழ் உள்ள ஆடைகளுக்கு, 5 சதவீதம்; 1,000த்துக்கு மேல் விலை நிர்ணயிக்கப்படும் ஆடைகளுக்கு, 12 சதவீதம் என, இரு வகையாக வரி விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆடை ஏற்றுமதி சார்ந்த, ‘ஜாப் ஒர்க்’ சேவைகளுக்கு, வரி விலக்கு அளிப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுபோல், பருத்தி நுால் துணிக்கும், 5 சதவீதமே வரி விதிக்கப்பட்டுள்ளது. சீரான வரி விதிப்பால், ஏற்றுமதி ஆடை வர்த்தகம் பெருகும். இவ்வாறு சக்திவேல் கூறினார்.