மகிழ்ச்சி மழையில் இந்தியா : மண்ணைக் கவ்வியது பாக்.,
சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் வான் மழையை மிஞ்சிய இந்திய வீரர்கள், ரன் மழை பொழிந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்த கேப்டன் கோஹ்லி, யுவராஜ் சிங், தவான், ரோகித் சர்மா அரைசதம் கடக்க, இந்திய அணி 48 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்தது.இங்கிலாந்து மற்றும் வேல்சில் 8வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. நேற்று பர்மிங்காமில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.அஷ்வின் இல்லை : இந்திய அணியில் ‘வேகங்களுக்கு’ முக்கியத்துவம் அளிக்கப்பட, நட்சத்திர ‘ஸ்பின்னரான’ அஷ்வின் நீக்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது, ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.நல்ல அடித்தளம் : இந்திய அணிக்கு ரோகித் சர்மா, தவான் சேர்ந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். ஆரம்பத்தில் இவர்கள் மந்தமாக ஆட, முதல் 5 ஓவரில் 15 ரன்கள் தான் எடுக்கப்பட்டன. இந்திய அணி 9.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, ஆட்டம் 50 நிமிடங்கள் தாமதமானது.விளாசல் ஆரம்பம் : பின் ஆட்டம் துவங்கியதும் இந்திய வீரர்கள் ரன் வேகத்தை அதிகரித் தனர். ஷதாப் கான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித் சர்மா அரைசதம் கடந்தார். வகாப் ரியாஸ் வீசிய அடுத்த ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்த தவானும் அரைசதம் கடக்க, போட்டியில் சூடு பிடித்தது. முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்த நிலையில் ஷதாப் ‘சுழலில்’ தவான்(68) அவுட்டானார்.48 ஓவர் போட்டி : இந்திய அணி 33.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட, ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின் 48 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது. வகாப் ரியாஸ் ஓவரில் ரோகித் சர்மா வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து ரன் மழை பொழிந்தார். இந்த நேரத்தில் ஷதாப் பந்தை தட்டி விட்ட கோஹ்லி வீணாக ஒரு ரன்னுக்கு ஓடினார். மறுபுறத்தில் இருந்து ஓடி வந்த ரோகித் சர்மா ‘டைவ்’ அடித்து ‘கிரீசை’ தொட்டார். இது தொடர்பாக ‘டிவி’ அம்பயரிடம்சந்தேகம் கேட்கப்பட்டது. ‘ரீப்ளே’வில் பேட், ‘கிரீசில்’ இருந்து லேசாக விலகி இருப்பது தெரிய வர, சர்ச்சைக்குரிய முறையில் ரோகித் சர்மா(91) ரன் அவுட்டானார்.யுவராஜ் அரைசதம் : அடுத்து வந்த யுவராஜ் சிங் 8 ரன் எடுத்த நிலையில் கொடுத்த ‘கேட்ச்சை’, ஹசன் அலி நழுவவிட கண்டம் தப்பினார். இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்த இவர், கலக்கலாக ஆடினார். ஹசன் அலி ஓவரில் ஒரு பவுண்டரி, இமாலய சிக்சர் அடித்து மலைக்க வைத்தார்.கடைசி கட்டத்தில் யுவராஜ், கோஹ்லி சேர்ந்து பாகிஸ்தான் பவுலர்களை ஒருகை பார்த்தனர். ஹசன் அலி ஓவரில் யுவராஜ் ஒரு பவுண்டரி, கோஹ்லி ஒரு சிக்சர் அடிக்க மொத்தம் 17 ரன்கள் எடுக்கப்பட்டன. யுவராஜ், 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஹசன் அலி பந்தில் ‘ரிவியு’ முறையில் யுவராஜ்(53) எல்.பி.டபியுள்யு., ஆனார்.கோஹ்லி ‘ஸ்பெஷல்’ : போகப் போக கோஹ்லியின் ‘ஸ்பெஷல்’ ஆட்டத்தை காண முடிந்தது. ஹசன் அலி ஓவரில் நின்ற இடத்தில் இருந்தே அழகாக பவுண்டரி அடித்தார். பின் ஒரு அற்புத சிக்சர் விளாசினார். ஹர்திக் பாண்ட்யாவும் ரன் மழையில் நனைந்தார். இவர், இமாத் வாசிம் ஓவரில் வரிசையாக மூன்று சிக்சர்கள் விளாசினார். கடைசி பந்தில் கோஹ்லியும் ஒரு பவுண்டரி அடிக்க, இந்த ஓவரில் மட்டும் மொத்தம் 23 ரன்கள் எடுக்கப்பட்டன. கடைசி 4 ஓவரில் 72 ரன்கள் எடுக்கப்பட்டன. இந்திய அணி 48 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்தது. கோஹ்லி 81(68 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), பாண்ட்யா(20) அவுட்டாகாமல் இருந்தனர்.விக்கெட் மடமட : பின் களமிறங்கிய பாகிஸ்தானுக்க டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 48 ஓவரில் 324 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்த போது, மழை குறுக்கிட, 41 ஓவரில் 289 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு மாற்றப்பட்டது. இந்திய வேகங்களிடம் ஷேசாத்(12), பாபர் (8) சரணடைந்தனர். அரைசதம் எட்டிய நிலையில் அசார் அலி(50) நடையை கட்டினார். மற்ற பேட்ஸ்மேன்களும் தாக்குபிடிக்கவில்லை. ஜடேஜாவின் துல்லிய ‘த்ரோ’வில் சோயப் மாலிக்(15) ரன் அவுட்டானார். ஹபீஸ் (33) பெரிதாக சோபிக்கவில்லை. கால் காயத்தால் அவதிப்பட்ட வகாப் ரியாஸ் களமிறங்கவில்லை. பாகிஸ்தான் அணி 33.4 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.ஆட்டநாயகன் விருதை யுவராஜ் வென்றார்.
வெற்றி துவக்கம் : சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெற்றியுடன் துவக்கிய இந்திய அணி இரண்டு புள்ளிகளை முழுமையாக பெற்றது. இந்த வெற்றியை எல்லையில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் முதல் சாமான்ய இந்தியன் வரை விடியவிடிய கொண்டாடி மகிழ்ந்தனர்.