யுவராஜ் இன்னிங்ஸ் ஆட்டத்தின் போக்கை மாற்றியது: விராட் கோலி அங்கீகரிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை ஆட்டத்தில் யுவராஜ் சிங்கின் அதிரடி அரைசதம் ஆட்டத்தின் போக்கை மாற்றியது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
யுவராஜ் சிங் 32 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 53 ரன்கள் விளாசியதோடு, கோலியும் இவரும் இணைந்து 93 ரன்களை 10 ஓவர்களுக்குள் விளாசியது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.
அடிக்கடி மழையால் தொடர்ச்சி அறுந்து போன ஆட்டத்தில் மந்த நிலை ஏற்பட யுவராஜ் சிங் தனது தடையற்ற அபாரமான ஸ்ட்ரோக் பிளேயினால் கோலியின் நம்பிக்கையையே அதிகரித்தார் என்றால் மிகையாகாது.
இந்நிலையில் இதனை அங்கீகரித்த விராட் கோலி கூறியதாவது:
யுவராஜ் பேட் செய்த விதம் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியதாக அமைந்தது. அந்த அடிக்குப்பிறகே நாங்களும் பந்துகளை அடித்து ஆடுவதற்கான நம்பிக்கை பிறந்தது.
அவர் ஆடிய விதம் அவர் மட்டுமே அத்தகைய விதத்தில் பந்துகளை அடிக்க முடியும் என்பதாக இருந்தது. தாழ்வான புல்டாஸ்களை சிக்சர்களுக்கும் நான்குகளுக்கும் விரட்டுவது ஏன் யார்க்கர்களையும் தோண்டி எடுத்து பவுண்டரிகள் அடிப்பதென்பது தனித்துவமான திறமையே.
40 ரன்கள் வரை நான் ஆட்டத்தில் ஒன்று, இரண்டு என்றே எடுத்து வந்தேன். பெரிய ஷாட்களுக்கு போக முடியவில்லை காரணம் சூழ்நிலை இரண்டுங்கெட்டானக இருந்தது. கிட்டத்தட்ட 4 முறை மழையினால் போய்விட்டு போய்விட்டு வந்தோம். எனவே நீண்ட இன்னிங்ஸை ஆடி கடைசி வரை ஆடி அணிக்காக பங்களிப்பு செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறை நன்றாக செட்டில் ஆன பிறகும் உள்ளே போய் விட்டு மீண்டும் களத்தில் இறங்குவது என்பது உத்வேகத்தை கெடுக்கும் விஷயமாகும், ஒவ்வொரு முறையும் பந்துகளை முதலிலிருந்து பார்த்து தயார் செய்ய வேண்டியதாக இருந்தது.
யுவராஜ் இறங்கியதும் மழைக்காக உள்ளே செல்ல வேண்டிய நிலை ஏற்படவில்லை. அவர் முதல் பந்திலிருந்தே அடிக்கத் தொடங்கியது என் மீதிருந்த அழுத்தத்தை அகற்றியது. நான் அவருக்கு ஸ்ட்ரைக் கொடுத்திருக்க வேண்டும். அவர் ஆட்டமிழந்தவுடன் நான் அடிக்கத் தொடங்கினேன், ஆனால் யுவி இன்னிங்ஸ் இந்த ஆட்டத்தின் போக்கை மாற்றியது என்பதில் இருவேறு கருத்தில்லை.
ஒவ்வொரு முறையும் யுவராஜ் இதனை அணிக்காகச் செய்கிறார், 5 முறையில் 3 முறை ஆட்டத்தின் போக்கை மாற்றும் இன்னிங்சை ஆடுகிறார். அதனால்தான் அவரை இந்த இடத்தில் களமிறங்குவதை விரும்புகிறோம்.
உத்வேகம் வரும் போகும் ஆனால் நாம் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். மீண்டும் உத்வேகம் வரும்போது அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே எனக்கு நம்பிக்கை என் மீது நம்பிக்கை இருக்கிறது, கடைசியில் 10 பந்துகளில் 30 ரன்களை என்னால் எடுக்க முடியும்.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.