சாம்பியன்ஸ் டிராபி 2017: நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து
செவ்வாய்க்கிழமை நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இங்கிலாந்து 87 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணியானது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து அணி நியூஸிலாந்தை எதிர்கொண்டது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணிக்கு, அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜாஸ் பட்லர் ஆகியோர் அரை சதம் கடந்து ரன் சேர்க்க உதவினர். 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும் 310 ரன்களை இங்கிலாந்து குவித்திருந்தது.
இலக்கை விரட்டிய நியூஸிலாந்து அணியை கேப்டன் கேன் வில்லியம்சன் சரியாக வழிநடத்தி வந்தார். ஆனால் போட்டியின் முக்கியமான கட்டத்தில் அவர் 87 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 44.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது நியூஸிலாந்து. இங்கிலாந்து சார்பில் லியாம் ப்ளங்கெட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தனது அடுத்த போட்டியில் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை சந்திக்கவுள்ளது. இந்த போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா வெளியேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.