‘பாகுபலி’ கதாசிரியர் கைவண்ணத்தில் ‘ஆரம்ப்’: சீரியல் கதாநாயகியாகிறார் கார்த்திகா
‘பாகுபலி’ படத்தின் இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். இவர்தான் ‘பாகுபலி’ படத்தின் கதாசிரியர். இவரது கைவண்ணத்தில் ‘ஆரம்ப்’ (ஆரம்பம்) என்ற தொலைக்காட்சி தொடர் உருவாகிறது. பல கோடி ரூபாய் செலவில் தயாராகும் இந்த மகா மெகா தொடரில் ‘தேவசேனா’ பாத்திரத்தில் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நடித்து வருகிறார்.
‘பாகுபலி -2’ திரைப்படம் உலகம் முழு வதும் வெளியாகி வசூலில் ரூ. 1,500 கோடியை தாண்டி சாதனை புரிந்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ள இந்த சாதனைப் படத்தின் இரண்டு பாகங்களுக்கும் திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆவார். இவரது திரைக் கதைக்கு தற்போது இந்திய திரையுலகில் பெரும் மவுசு கூடி உள்ளதைத் தொடர்ந்து, இவர் தற்போது ‘ஆரம்ப்’(ஆரம்பம்) எனும் சரித்திர திரைக்கதையை எழுதியுள்ளார்.
இது தொலைக்காட்சித் தொடராக இம்மாதம் 24-ம் தேதி முதல் ஸ்டார் நெட் ஒர்க் சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளது. இந்தத் தொடரை கோல்ட் பெஹல் இயக்கி வருகிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இதில் தற்போது கிராபிக்ஸ் தொழில்நுட்பக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேவசேனா பாத்திரத்தில் நடிகை கார்த்திகாவும் வருண தேவனாக ரஜனீஷ் துக்காலும் நடித்து வருகிறார்கள். ‘பாகுபலி’ படக் கதாசிரியர் எழுதும் கதை என்பதால், ‘ஆரம்ப்’ தொடர் ஏக எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.