வெற்றி பெற வேண்டுமானால் சில நேரங்களில் மனம் புண்படும் வகையில் பேசுவதும் அவசியம்: கோலி
“வெற்றி பெற வேண்டுமானால் சில நேரங்களில் மனம் புண்படும் வகையில் பேசுவதும் அவசியம்” என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியிருக்கிறார்.
கிரிக்கெட் போட்டிகளில் பின்னடைவு ஏற்படும்போதெல்லாம் அதை சீர்செய்ய கேப்டன்கள் தங்களுக்கே உரித்தான பாணியில் சில முறைகளை கையாள்கின்றனர். அந்தவகையில் இந்திய கேப்டன் விராட் கோலியின் தோல்வியில் இருந்து மீண்டெழுவதற்கான தாரக மந்திரம் மிகவும் எளிமையானது என்றே கூறவேண்டும். “வெற்றி பெற வேண்டுமானால் சில நேரங்களில் மனம் புண்படும் வகையில் பேசுவதும் அவசியம்” எனக் கூறுகிறார் கோலி.
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் தோல்வி கோலியை சுயபரிசோதனை செய்துகொள்ள உந்தியுள்ளது.
அதன் வெளிப்பாடகவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குப் பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கோலி கேப்டன் பதவி குறித்து சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.
பேட்டியில் விராட் கோலி, “நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும். சிலநேரங்களில் மனம் புண்படும் என்று தெரிந்தாலும்கூட சில விஷயங்களை சொல்லியே ஆக வேண்டும். அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொருவரும் என்ன தவறு செய்தார்கள் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இது எனக்கும் பொருந்தும். பட்டியலிடப்பட்ட தவறுகளை திருத்துவதை சவாலாக ஏற்றுக்கொண்டு நம்மை நிரூபிக்க வேண்டும். அதற்காகத்தான் கோடிக்கணக்கான மக்களில் நாம் தேர்வு செய்யப்பட்டு இங்கு விளையாடிக் கொண்டிருக்கிறோம்.
நாட்டுக்காக இதை நீங்கள் செய்தே ஆகவேண்டும். ஒரு தவறில் இருந்து மீண்டெழுவதில் சிறப்பாக செயல்படவேண்டும். ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருக்க முடியாது. இது ஏதோ ஒருசில வீரர்களுக்கான அறிவுறுத்தல் அல்ல. அனைத்து வீரர்களிடமும் இதை வலியுறுத்துகிறோம். அனைவருமே நன்கு ஒத்துழைக்கின்றனர். இன்றைய போட்டி அணியின் சிறப்பான வெளிப்படுத்ததல் என்றே சொல்வேன்.
கேப்டனாக இருப்பதற்கு மதிப்பீடு செய்வதில் நேர்மையாக இருத்தல் மட்டும் போதாது. மனிதவள மேலாண்மைத் திறனும் தேவை. யாராவது ஒரு குறிப்பிட்ட நபரை மட்டுமே தொந்தரவு செய்யாமல் மனித வளத்தை கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.
சில நேரங்களில் மனம் புண்படும் வகையில் பேசுவதும் அவசியமே. ஆனால், அதற்காக ஒரே நபரையே குறிவைத்து தொந்தரவு செய்வதும்கூடாது. ஏனெனில் இங்கு விளையாடும் அனைவரும் சர்வதேச வீரர்கள். அவர்களுடன் எப்படி பேச வேண்டும், அவர்களை எப்படி அணுக வேண்டும் அவர்களுடன் எதை விவாதிக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்குமே சுய உந்துதல் இருக்கும். ஒவ்வொருவருக்குமே எதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்; அணிக்கு தன்னிடம் இருந்து என்னமாதிரியான பங்களிப்பு தேவைப்படுகிறது என்பது தெரியும். அவர்கள் தேவையான அளவு ஊக்கம் பெற்றிருக்கின்றனர். அவ்வப்போது ஏற்படும் சில பின்னடைவுகளை ஓரணியாக நாங்களே சீர் செய்து கொள்கிறோம். அதற்காகத் தான் கடினமான பயிற்சியை மேற்கொள்கிறோம். அந்தப் பயிற்சி இக்கட்டான சூழலில் எங்களுக்கு கை கொடுக்கிறது.
இலங்கையுடனான தோல்வி மன உறுதியை நிச்சயம் நொறுக்கியிருக்கும் அத்தகைய தோல்விக்குப் பின் அமைதியாக சலனமற்று இருப்பது எளிதல்ல. ஆனால், அணியினர் அத்தகைய அமைதியை கடைபிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி.
ஒரு கேப்டனாக நான் முழுமையாக மன சாந்தியடைந்துவிடவில்லை. எனக்கு எந்தப் பிரச்சினையுமே ஏற்படவில்லை எனக் கூறமாட்டேன். அணியை சீர்படுத்த முயற்சித்தேன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அணியினர் அதற்கேற்ப நடந்துகொண்டனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா பெற்றுள்ள வெற்றி அணியின் மிகவும் முழுமையான செயல்திறனின் வெளிப்பாடு.
ஒரு பெரிய போட்டியை எதிர்கொள்ள தீட்டிய திட்டத்தின்படி இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசியதில் எனக்கு பெருமகிழ்ச்சி. தென் ஆப்பிரிக்கா போன்ற அணிக்கு எதிரான விளையாட்டில் இத்தகைய பந்துவீச்சு நம்பிக்கையை அதிகரிக்கிறது. இந்த பந்துவீச்சு ஏற்படுத்தியுள்ள நம்பிக்கை எங்கள் அனைவரிடமும் பரவியிருக்கிறது. இதே நம்பிக்கையை அரையிறுதிக்கும் எடுத்துச் செல்ல முயற்சிக்கிறோம்” என்றார்.
முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற க்ரூப் பி பிரிவு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. கிட்டத்தட்ட காலிறுதி போல அமைந்த இந்த ஆட்டத்தின் வெற்றியால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஜூன் 15 அன்று நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.