Breaking News
கதை ஈர்த்துவிட்டால் கஷ்டங்கள் தெரியாது!- சாய் தன்ஷிகா

‘கபாலி’யில் ஆக்‌ஷன் பகுதியில் அசத்திய சாய் தன்ஷிகா பரபரப்பாக இருக்கிறார். தமிழில் ‘உரு’ படத்தைத் தொடர்ந்து ‘காலக்கூத்து’, ‘காத்தாடி’, ‘விழித்திரு’ என்று வரிசையாக அவரது நடிப்பில் படங்கள் வெளிவர உள்ளன. இதற்குப் பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்கள் என்றும் டைரியை நிரப்பி வைத்திருக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்..

‘கபாலி’ படத்தை அடுத்து பா.இரஞ் சித் இயக்கும் ‘காலா’ படத்தில் நீங்கள் இல்லையே?

நான் மட்டுமல்ல; முந்தைய படக் குழுவினர் யாருமே இதில் இல்லை. ‘காலா’ கதைக்களம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை ‘கபாலி 2’ எடுத்தால் எங்களுக்கு வேலை இருக்கலாம். அதையும் கதையின் சூழல்தான் முடிவு செய்யும்.

விரைவில் வெளிவர உள்ள ‘உரு’ படத்தின் படப்பிடிப்பு, காடு, மலையில் இரவு நேரப் பயணம், மைனஸ் டிகிரியில் குளிர் என்று ஆபத்தாக இருந்ததாமே?

ஒரு கதையைச் சொல்லி முடிக்கும்போதே, இந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்று தோணும். அதுபோன்ற திரைக்கதைதான் ‘உரு’. கலையரசன் எழுத்தாளராக நடித்திருப்பார். அவரது மனைவியாக வருகிறேன். சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது.

கொடைக்கானலில் டிசம்பர் மாதக் கடுங்குளிரில், அதுவும் வெடவெடக்கும் நள்ளிரவு நேரத்தில் பல காட்சிகள் எடுக்கப் பட்டன. முழு அளவில் அந்தக் கதை என்னை ஈர்த்துவிட்டதால், அவையெல்லாம் கஷ்டமாகத் தெரியவில்லை. இயக்குநர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் என்று அனைவரின் பங்களிப்பும் இப்படத்துக்கு பெரிய பலம்.

அடுத்தடுத்து தமிழில் ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் உங்கள் படங்கள் பற்றி..

‘காலக்கூத்து’ படத்தில் மதுரைப் பெண்ணாக நடித்திருக்கிறேன். ‘விழித்திரு’ படத்தில் என் கதாபாத்திரம் பெயரே சரோஜாதேவி. இந்தக் கதைக்களத்துக்கு அந்தமாதிரி ஒரு பெயர் தேவைப்பட்டது. இதில் சென்னை குடிசைப் பகுதி பெண்ணாக நடித்திருக்கிறேன். ‘காத்தாடி’ படம் சாலைப்பகுதியை பின்னணியாகக் கொண்ட களம்.

எல்லாம் சரி.. டூயட், ரொமான்ஸ், காதல் வசனம் பேசி நடிக்கும் தன்ஷிகாவை ரசிகர்கள் எப்போது பார்ப்பது?

ஆக்‌ஷன் களத்தில் ஒரு கதை நன்றாக இருக்கிறதே என்று அதில் நடித்தால், தொடர்ந்து அதேமாதிரி கதைகள்தான் தேடி வருகின்றன. ஆனால், ஒரே மாதிரி கதைகள் வரும்போதெல்லாம் நான் தெளிவாகவே இருந்திருக்கிறேன். அடுத்து என் நடிப்பில் மலை யாளத்தில் வெளிவர இருக்கும் ‘சோலோ’, முழுக்க முழுக்க காதல் வழியும் படம். துல்கர் சல்மானும், நானும் நடித்திருக் கிறோம். ஒரு ரசிகைபோல ரிலீஸை எதிர் பார்த்துக் காத் திருக்கிறேன். இது தமிழிலும் ரிலீஸாக உள்ளது.

மலையாளத்தில் உங்களுக்கு இது முதல் படமாச்சே?

தமிழில் இருந்து வேறொரு மொழிக்கு செல்லும்போது கதையும், கதாபாத்திரமும் நிச்சயம் வித்தியாசமாக இருக்கணும்னு ரொம்ப நாட்களாக காத்திருந்தேன். எதிர் பார்த்தது போலவே ‘சோலோ’ அமைந்தது. பிஜெய் நம்பியார் முக்கியமான இயக்குநர். இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து இயக்கியவர். கதையைக் கேட்டதுமே சம் மதித்துவிட்டேன்.

தெலுங்கு, கன்னடத்திலும் பிஸியாகத் தொடங்கியாச்சு. கவுதம் வாசுதேவ் மேனனின் உதவியாளர் ரமணா இயக்கத்தில் தெலுங்கு, தமிழில் உருவாகும் படத்தில் நடித்துவருகிறேன். பெண்களின் முக்கியத்துவம் பற்றிப் பேசும் படம். 7 ஆண்டுகள் எடுத்துக்கொண்டு இயக்குநர் இக்கதையை எழுதியிருக்கிறார். அடுத்து கன்னட இயக்குநர் சுனில் குமார் தேசாய் ‘கபாலி’ படம் பார்த்துவிட்டு ஒரு கதை சொன்னார். இந்தப்படம் கன்னடம், தெலுங்கில் உருவாக உள்ளது. அதன் பணிகளும் நடந்துவருகின்றன.

நீங்கள் நடித்துள்ள ‘சினம்’ குறும்படம் பற்றி பல்வேறு விதமான செய்திகள் வரு கின்றதே?

பெண்ணின் கோபத்தை வெளிப்படுத்தும் குறும்படம் அது. பாலியல் தொழிலாளியின் கதை என்று பலரும் எழுதுகின்றனர். அதையெல்லாம் கடந்து இக்கதையில் ஒரு புனிதம் இருப்பதாக நினைக்கிறேன். அதனால்தான் இதில் நடித்தேன். அதில் தவறான காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. தொடர்ச்சியாக 11 நிமிடங்கள் வசனம் பேசும் காட்சி ஒன்றும் இடம்பெற்றுள்ளது. என் சினிமா பயணத்தில் அந்த படம் ஒரு மைல் கல்.

பெண்கள் விழிப்புணர்வு, வீரம் சார்ந்த கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தும் நீங்கள், பொது வாழ்வில் பெண்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதில்லையே?

சமூகப் பிரச்சினைகளைக் கையில் எடுப்பதானால், அதில் முழுமையாக இறங்கி செயல்பட வேண்டும். நான் ஒரு நடிகை. இப்போதைக்கு நடிப்பின் மூலமாக என்ன சொல்ல முடியுமோ, அதைச் சொல்கிறேன். எதிர்காலத்தில் முழுமையாக இறங்கி செயல் பட வாய்ப்பு கிடைக்கும்போது, கட்டாயம் சமூக பிரச்சினைகள், பெண்களின் பிரச்சினை களுக்கு குரல் கொடுப்பேன்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.