தமிழ் ராக்கர்ஸ் மட்டும்தான் பிரச்சினையா?- ஆர்.ஜே.பாலாஜி
தமிழ் ராக்கர்ஸை பிடித்துவிட்டால் அனைத்தும் அழிந்துவிடுமா என்று ஆர்.ஜே.பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இவன் தந்திரன்’. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை கண்ணன் மற்றும் ராம்பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். தனஞ்ஜெயன் வெளியிடவுள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இயக்குநர் கே.பாக்யராஜ் முன்னிலையில் தயாரிப்பாளர் தாணு இசையை வெளியிட ஆர்யா பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில் ஆர்.ஜே. பாலாஜி பேசியதாவது, “பள்ளி, கல்லூரியில் படித்துவிட்டு வெளியே செல்லும் மாணவர்கள் எந்தளவுக்கு கஷ்டப்படுகிறார்கள் என்பதை தான் இயக்குநர் கண்ணன் கூறியுள்ளார். இந்தப் படம் தீர்வு கொடுத்துள்ளதா என்றால், தீர்வு எல்லாம் அரசாங்கத்தாலே கூட கொடுக்க முடியவில்லை. சினிமாக்காரர்கள் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்பதில் உடன்பாடில்லை.
ஒவ்வொரு முறையும் புதிய தொழில்நுட்பம் வரும் போது, சினிமா மாதிரியான துறைக்கு அச்சுறுத்தலாகத் தான் இருக்கும். திருட்டு வி.சி.டி பற்றி 20 வருடங்களாக பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது திருட்டு வி.சி.டி கிடையாது. இன்றைக்கும் டி.வி.டியும் கிடையாது. ஆன்லைன் திருட்டு என்பது தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய திரையுலகம் மட்டுமன்றி ஆங்கிலத் திரையுலகிற்கும் அச்சுறுத்தலாகத் தான் இருக்கிறது.
நம்மால் தொழில்நுட்பத்தை அழிக்க முடியாது. நாமும் தொழில்நுட்பத்தோடு வளர வேண்டும். கமல் சாரும் அதையே தான் பலமுறை சொல்லியுள்ளார். ஆன்லைன் திருட்டு பிரச்சினைக்கு வள்ளுவர் கோட்டத்தில் உட்கார்ந்து பேசினால் கிடைக்காது. இன்போசிஸ் மாதிரியான நிறுவனங்களில் பணியாற்றும் பொறியாளர்களோடு உட்கார்ந்து, இதை எப்படி தடுக்கலாம் என்று பேச வேண்டும்.
இயக்குநர் பாலாஜி மோகன் ஹாட் ஸ்டார் ஆன்லைன் நிறுவனத்துக்கு என தனியாக இணையத் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார். இணையம் மூலமாக பணம் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளார். எது நமக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதோ, அது மூலமாக பணம் சம்பாதிக்க தொடங்க வேண்டும். தற்போது பட உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனத்துக்கு விற்பனை செய்து பணம் சம்பாதிக்க தொடங்கியுள்ளார்கள்.
தொலைக்காட்சி, இணையம் மூலமாக எப்படி பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதை நோக்கி நாம் செல்ல வேண்டும். அதை எதிர்க்க முடியுமா என்று தெரியவில்லை. தமிழ் ராக்கர்ஸை பிடித்துவிட்டால் அனைத்தும் அழிந்துவிடுமா என்றால் இல்லை. தமிழ் ராக்கர்ஸை ஒருவேளை பிடித்துவிட்டால், இன்னொரு 10 தமிழ் ராக்கர்ஸ் வருவார்கள். அதன் மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை நோக்கி செல்வதே சரியானது. அவர்களை அழிக்க வேண்டும் என்றால் அதை செய்ய இயலாது. அதை ஹாலிவுட்டால் கூட செய்ய இயலாது” என்று பேசினார் ஆர்.ஜே.பாலாஜி