Breaking News
ஜாதவை பந்துவீச அழைத்ததில் டோனிக்கும் முக்கிய பங்கு உண்டு இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டி

வங்காளதேசத்துக்கு எதிரான அரைஇறுதியில் திருப்பத்தை ஏற்படுத்திய பகுதி நேர பவுலர் கேதர் ஜாதவை பந்து வீச அழைத்ததில் டோனிக்கும் முக்கிய பங்கு உண்டு என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இந்தியா வெற்றி

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடந்த அரைஇறுதியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை புரட்டியெடுத்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் ஒரு கட்டத்தில் 300 ரன்களை தாண்டுவது போல் சென்றது. தமிம் இக்பால் (70 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (61 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர் கேதர்ஜாதவ் கபளகரம் செய்ததும் ஆட்டத்தின் போக்கு மாறியது. அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 264 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி ஷிகர் தவான் (46 ரன்), ரோகித் சர்மா (123 ரன், நாட்-அவுட்), கேப்டன் விராட் கோலி (96 ரன், நாட்-அவுட்) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் 40.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

கோலி பேட்டி

ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 8 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்த இந்திய கேப்டன் விராட் கோலி வெற்றிக்கு பிறகு கூறியதாவது:-

கேதர் ஜாதவ் அடுத்தடுத்து கைப்பற்றிய 2 விக்கெட்டுகளே ஆட்டத்தின் திருப்புமுனையாகும். முக்கியமான கட்டத்தில் கேதர் ஜாதவை பந்து வீச அழைத்த முடிவுக்காக ஒட்டுமொத்த பாராட்டையும் நான் மட்டுமே எடுத்துக்கொள்ளமாட்டேன். நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் விக்கெட் கீப்பர் டோனியுடன் ஆலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்தேன். எனவே இந்த பாராட்டு டோனிக்கும் போய் சேர வேண்டும்.

கேதர் ஜாதவ் வலைபயிற்சியில் அதிகமாக பந்துவீசியதில்லை. ஆனால் அவர் ஒரு சாதுர்யமான கிரிக்கெட் வீரர். எந்த இடத்தில் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். பேட்ஸ்மேனை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பந்து வீசுவது அணிக்கு அனுகூலமே. தனது பந்து வீச்சு வியூகத்தை களத்தில் கச்சிதமாக செயல்படுத்தினார்.

பவுலர்களுக்கு பாராட்டு

வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமாரும், பும்ராவும் அற்புதமாக பந்து வீசினர். குறிப்பாக கடைசி இரு ஆட்டங்களில் அவர்கள் தொடக்க மற்றும் இறுதி கட்டத்தில் அபாரமாக பந்து வீசினர். அவர்களின் விக்கெட் வீழ்த்தும் திறமையை எதிரணியும் அறியும். அதனால் தான் அவர்களது பந்து வீச்சை மற்ற அணியினர் எப்போதும் கவனமாக எதிர்கொள்கிறார்கள்.

இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எப்படி அணுகுவீர்கள் என்று கேட்கிறீர்கள். இதுவரை நாங்கள் எப்படி விளையாடினோமோ அதே போன்று இறுதிப்போட்டியிலும் விளையாட முயற்சிப்போம். அவர்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை அறிவோம். அதற்கு ஏற்ப எங்களது திட்டங்களை வகுப்போம். இறுதிப்போட்டிக்கு என்று அணியில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக நினைக்கவில்லை.

ரோகித் சர்மா குறித்து…

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இடம் பெறாதது குறித்து கேட்கிறீர்கள். இடுப்பு பகுதி காயத்துக்கு ஆபரேஷன் செய்து அணிக்கு திரும்பிய ரோகித் சர்மா தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் அந்த சீசன் முழுவதும் அவர் ஆட வேண்டி இருந்தது.

அணியில் அவர் முக்கியமான வீரர். ஆபரேஷன் செய்து விட்டு வந்திருப்பதால் அவரை மிகவும் கவனமாக கையாள வேண்டும். கொஞ்சம் கடினமாக பயன்படுத்தினாலும், மீண்டும் காயப்பிரச்சினை ஏற்பட்டு 7-8 மாதங்கள் வெளியே இருக்க வேண்டிய நிலைமை வரலாம். அதனால் தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கோலி கூறினார்.

அமிர் வருகிறார்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. முதுகுவலியால் அரைஇறுதியில் ஆடாத பாகிஸ்தான் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் இறுதிப்போட்டிக்கு உடல்தகுதி பெற்று விடுவார் என்று தெரிகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.