Breaking News
யானைகளுடன் ‘செல்பி’ :5 வாலிபர்களுக்கு அபராதம்

முதுமலை புலிகள் காப்பகத்தில், வனத்துறையின் கண்காணிப்பு இருந்தும், சுற்றுலா பயணியரின் அத்துமீறல் தொடர்கிறது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் வரும் சுற்றுலா பயணியர்,வனத்தையும், வனவிலங்குகளையும் கண்டு ரசிக்கும் வகையில், வனத்துறை சார்பில் சபாரி வேன்கள் இயக்கப்படுகின்றன. கக்கனல்லா முதல் தொரப்பள்ளி; தெப்பக்காடு முதல் மசினகுடி வரையிலான சாலையில் செல்லும் போதும், வன விலங்குகளை கண்டு ரசிக்க முடியும்.இது போன்ற நேரங்களில், வனவிலங்குகளை போட்டோ எடுக்கவும், அவற்றின் அருகே நின்று, ‘செல்பி’ எடுக்கவும், வாகனங்களிலிருந்து இறங்கி விலங்குகளின் அருகே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அமல் செய்ய, வனத்துறையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.எனினும், சுற்றுலா பயணியரின் அத்துமீறல் தொடர்கிறது. விலங்குகளின் அருகில் நின்று, செல்பி எடுப்பதில்
ஆர்வம் காட்டுவதுடன், அவற்றை நோக்கி கூச்சலிடுவது, பழங்களை வீசுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.நேற்று கார்குடி வனச்சரக சாலையோரம் நின்றிருந்த ஆண் யானை அருகே சென்ற வாலிபர்கள், அருகே நின்று, ‘செல்பி’ எடுத்ததுடன், கூச்சலும் எழுப்பினர். கோபமடைந்த யானை துரத்தியதும், வாலிபர்கள் வாகனங்களில் தப்பினர். தகவல் அறிந்த அங்கு வந்த வனத்துறையினர், பைக்கில் வந்த வாலிபர்கள் ஐந்து பேருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

வனத்துறையினர் கூறுகையில், ‘சுற்றுலா வருபவர்கள், வனவிலங்குகளை தொல்லைப்படுத்தாமல் இருப்பது அவசியம். யானை, காட்டெருமை ஆகியவற்றின் அருகில் சென்றால், உயிருக்கு
உத்தரவாதமில்லாத சூழல் ஏற்படும்’ என்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.