தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ எங்கே? அரசுக்கு ஐகோர்ட் ‘நோட்டீஸ்’
தமிழகத்தில் எங்கு, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய உள்ளது என்பது பற்றி, அறிவிப்பு வெளியிட தாக்கலான வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க, மத்திய குழு ஆய்வு செய்தது. அதன்பின், மத்திய அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லை.தமிழகத்தில், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய வலியுறுத்தி, பல்வேறு மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன; பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மத்திய குழு ஆய்வு செய்தும், எங்கு, ‘எய்ம்ஸ்’ அமைய உள்ளது என்பது பற்றி அறிவிப்பு வெளியாகவில்லை. இதை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு மனு அனுப்பினேன்.தமிழக மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், எந்த இடத்தில், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய உள்ளது என்பது பற்றி, உடனடியாக அறிவிப்பு வெளியிட, மத்திய சுகாதாரத் துறை செயலர், ‘எய்ம்ஸ்’ இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.நீதிபதிகள், ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வு, மத்திய சுகாதாரத் துறை செயலர், தமிழக தலைமை செயலர், சுகாதாரத் துறை செயலருக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பி, ஜூலை, 12க்கு வழக்கை ஒத்தி வைத்தது.