Breaking News
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு முதல் நாளிலேயே 8,379 விண்ணப்பங்கள் விற்பனை: ஜூலை 7 வரை விநியோகம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான விண்ணப்ப விநியோகம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே 8,379 விண்ணப் பங்கள் விற்பனையாகின.

தமிழகத்தில் 2017-18 கல்வி யாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET – நீட்) மதிப்பெண் அடிப்படையில் நடக்கவுள்ளது. இதில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படமாட்டாது. அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப் படுகிறது. எஞ்சிய 85 சதவீத இடங்கள், தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாநில பாடத்திட்டத் தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத்திட்டங்களில் படித்தவர் களுக்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விண்ணப்ப விநியோகம்

இந்நிலையில் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2017-18ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மற்றும் தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. சென்னையில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் காலை 8 மணி முதலே விண்ணப்பம் வாங்க ரூ.500-க்கான கேட்பு வரைவோலையுடன் (டிடி) மாணவர்கள் பெற்றோருடன் வரத் தொடங்கினர். டிடி எடுக்காத மாணவர்கள் அருகில் உள்ள வங்கிகளில் ஒரே நேரத்தில் குவிந்ததால் நீண்ட வரிசை காணப்பட்டது.

மாணவ, மாணவிகள் ஆர்வம்

அரசு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு என தனித்தனியாக விண்ணப்ப விநியோக மையங்கள் அமைக் கப்பட்டிருந்தன.

விண்ணப்ப மனுவுடன் ரூ.500-க் கான டிடியைக் கொடுத்து மாணவர்கள் ஆர்வமாக விண்ணப் பங்களைப் பெற்றுச் சென்றனர். தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தனியாக ரூ.500-க்கான டிடியை கொடுத்து மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றனர்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் தங்களது சாதிச் சான்றிதழ் நகலைக் கொடுத்து கட்டணமின்றி விண்ணப்பம் பெற தனியாக மையம் அமைக்கப்பட்டிருந்தது. சில கல்லூரிகளில் ஒரு மையம் மட்டுமே இருந்ததால், மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

ஞாயிறும் உண்டு

விண்ணப்ப விநியோகம் வரும் ஜூலை 7-ம் தேதி வரை தினமும் (ஞாயிறு உட்பட) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, தபால் மூலமாகவோ ‘செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈவெரா நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010’ என்ற முகவரிக்கு ஜூலை 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்களை www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். தரவரிசைப் பட்டியல் ஜூலை 14-ம் தேதி வெளியிடப்படுகிறது. ஜூலை 17-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.

இதுதொடர்பாக மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வராஜ் கூறும்போது, ‘‘அரசுக் கல்லூரி இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 6,542 விண்ணப்பங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,837 விண்ணப்பங்கள் என முதல் நாளிலேயே 8,379 விண்ணப்பங் கள் விற்பனையாகியுள்ளன. மொத்தம் 35 ஆயிரம் விண்ணப் பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.