நஷ்டத்தில் ‘அம்மா’ உணவகங்கள் : ‘காஸ்’ நிறுவனங்களுக்கு பாக்கி
அம்மா’ உணவகங்களில், சமையல் காஸ் சிலிண்டருக்கான தொகையை செலுத்த நிதியில்லாததால், எண்ணெய் நிறுவனங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள், பல லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளன.
நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள, ‘அம்மா’ உணவகங்களை, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பராமரித்து வருகின்றன. நீலகிரி உட்பட பல இடங்களில், வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், காய்கறி, சமையல் காஸ் சிலிண்டர் மற்றும் பராமரிப்பு செலவினங்களை ஈடு செய்ய முடியாமல், உள்ளாட்சி அமைப்புகள் திணறி வருகின்றன. ‘அம்மா’ உணவகங்களில், வணிக பயன்பாட்டுக்குரிய சிலிண்டர்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. உணவகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாலும், நிதிப் பற்றாக்குறையாலும், சிலிண்டருக்கான தொகையை, உள்ளாட்சி அமைப்புகளால் வழங்க முடிவதில்லை. நிதிச்சுமையில் இருந்து தப்பிக்க, ‘தினசரி ஒரு சிலிண்டருக்கான தொகையை மட்டுமே வழங்க முடியும்; அதற்கு மேல் செலவாகும் சிலிண்டருக்கான தொகையை, உணவகங்களை நடத்தும் மகளிர் குழுக்களே ஏற்க வேண்டும்’ என, உள்ளாட்சி அமைப்புகள் கூறி வருகின்றன. இதனால், மகளிர் குழுவினர் விழிபிதுங்கி உள்ளனர். சிலிண்டர் வினியோகஸ்தர்கள் கூறுகையில், ‘ஒவ்வொரு அம்மா உணவகங்களும், குறைந்தபட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை, சிலிண்டருக்கான தொகையை பாக்கி வைத்துள்ளன. அரசின் திட்டம் என்பதால், சிலிண்டர் வினியோகத்தை எங்களால் நிறுத்த முடியாத நிலை உள்ளது. பாக்கியை விரைவில் செலுத்துமாறு, உள்ளாட்சி அதிகாரிகளை வற்புறுத்தி வருகிறோம்’ என்றனர்.