Breaking News
தினகரன் அணியுடன் மோதல் முற்றுகிறது: வாரிசு அரசியலை சசிகலா உருவாக்கியதை ஏற்க மாட்டோம் – முதல்வர் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் திட்டவட்டம்

வாரிசு அரசியலை சசிகலா உருவாக் கியதை நாங்கள் ஏற்கவில்லை. எனவேதான் நாங்கள் புறக்கணிக் கிறோம் என்று அதிமுகவில் முதல்வர் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளதால், முதல்வர் பழனிசாமி – தினகரன் இடையில் மோதல் உச்சத்தை அடைந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுகவில் 3 அணிகள் உருவாகி, ஒருவரை ஒருவர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதில் சமீபகாலமாக, ஓபிஎஸ் அணியை தவிர்த்து தினகரன் மற்றும் முதல்வர் கே.பழனிசாமி அணியைச் சேர்ந்தவர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

அதிமுகவில் சசிகலாவை ஒதுக்கிவைத்த பின்னணியையும் தற்போது எம்எல்ஏக்களில் சிலர் வெளியிட்டு வருகின்றனர். நேற்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் இடையில், காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருகுமாறன், குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது முருகுமாறன் கூறியதாவது:

சமீபத்தில் நாடாளுமன்ற துணைத் தலைவர் தம்பிதுரை, சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்தார். அப்போது பத்திரிகையால் முகத்தை மறைத்தபடி சென்றுவந்தார். அவரிடம் இது தொடர்பாக முதல்வர் கே.பழனிசாமி, “தங்கள் சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம் உள்ளதா?” என்று கேட்டார். ஆனால், அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியதாக தெரிவித்தார்.

அதன்பின், முதல்வர் கே.பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இக்கூட்ட முடிவில், பிரதமர் கோரிக்கையை ஏற்று குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக முதல்வர் அறிவித்தார். அப்போது பொதுச் செயலாளரிடம் கேட்டுத்தான் அறிவிக்கப்பட்டதா என செய்தியாளர்கள் கேட்டனர். ஆனால், முதல்வரை தம்பிதுரை அழைத்துச் சென்றுவிட்டார். ஆனால், சில தினங்களில், டெல்லியில் பொதுச் செயலாளரும், முதல்வரும் சேர்ந்துதான் முடிவெடுத்ததாக தம்பிதுரை தெரிவித்தார்.

அவரது இந்த இரட்டை நிலை அறிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் தெரிவித்தோம். இக்கருத்தை தவறாக புரிந்துகொண்ட எம்எல்ஏ வெற்றிவேல், ‘எங்களுக்கு கட்சி விதிகள் தெரியாது’ என்று கூறியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது மாவட்டச் செயலாளராக இருந்த அவர், பொதுச் செயலாளர் படம், பெயரைக் குறிப்பிடாதது ஏன்? கட்சியின் நலன் சார்ந்துதான் இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. பொதுச் செயலாளரை பொது உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதுகூட தெரியாமலா நாங்கள் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் கூறும்போது, ‘‘ஆர்.கே.நகர் தேர்தலில் எந்த அடிப்படையில் அவர்கள் கூறும் பொதுச் செயலாளர் பெயரை, துணைப் பொதுச் செயலாளர், வெற்றிவேல் ஆகியோர் வெளிப்படுத்தவில்லையோ அதே அடிப்படையில்தான் நாங்களும் புறக்கணிக்கிறோம். நாங்கள் கட்சிக்கு பொதுச் செயலாளர் இல்லை என்று கூறவில்லை. இயக்கத்தை உருவாக்கிய எம்ஜிஆர் தனக்குப் பின் மனைவியையோ, அண்ணன் மகன், பேரப் பிள்ளைகளையோ வாரிசாக அறிவிக்கவில்லை. ஜானகியும் கட்சியை வழிநடத்தும் தகுதி கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயலலிதாவிடம் இருப்பதாக அவரிடம் ஒப்படைத்துவிட்டு, ஒதுங்கிக் கொண்டார்.

அதன்பின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் தன் உறவினர்களை கட்சிக்கு கொண்டுவரவில்லை. அதே நேரம், 33 ஆண்டுகளால் குடும்பத்தை விடுத்து உடன் இருந்த சசிகலாவை பொதுச் செயலாளராக நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டோம். ஆனால், அவருக்கு இடையூறு ஏற்பட்ட காலத்தில் கட்சியின் தொண்டர்களில் ஒருவரிடம் ஒப்படைத்திருந்தால் நாங்கள் ஏற்றுக் கொண்டிருப்போம். ஆனால், வாரிசு அரசியலை சசிகலா ஏற்படுத்தியதைத்தான் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.