Breaking News
இந்திராணி தாக்கப்பட்டது உண்மை: மருத்துவ அறிக்கையில் தகவல்

மகளை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள, இந்திராணி முகர்ஜி, சிறையில், தான் தாக்கப்பட்டதாக கூறுவது உண்மைதான்; அவரது உடலில் காயங்கள் உள்ளன’ என, அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வன்முறை:

பிரபல தனியார், ‘டிவி’ உரிமையாளர், பீட்டர் முகர்ஜியின் மனைவி, இந்திராணி முகர்ஜி, 44. தன் மகள் ஷீனா போராவை கொன்று, உடலை எரித்ததாக, இந்திராணி கைது செய்யப்பட்டு, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பைகுலா சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், சிறையில் பெண் கைதி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, வன்முறை ஏற்பட்டது. வன்முறையை துாண்டி விட்டதாக இந்திராணி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

புகார்:

இந்நிலையில், சிறையில் தான் தாக்கப்பட்டதாகவும், தன்னை பலாத்காரம் செய்வதாகவும், கொலை செய்து விடுவதாகவும் சிறை அதிகாரிகள் மிரட்டியதாக, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், இந்திராணி புகார் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, இந்திராணிக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்கு கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, மும்பையில் உள்ள ஜே.ஜே., அரசு மருத்துவமனையில், அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

உண்மை:

‘சிறையில் தாக்கப்பட்டதாக இந்திராணி கூறுவது உண்மைதான். அவரது உடலில், தாக்கப்பட்டதற்கான காயங்களும், அடையாளங்களும் உள்ளன. விரைவில் மருத்துவ அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளோம்’ என, பரிசோதனை செய்த, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.