Breaking News
எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா; மதுரையில் இன்று துவக்கம்

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா மதுரையில் இன்று (ஜூன் 30) துவங்குகிறது.

எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு துவக்க விழா மதுரையில் இன்று(ஜூன்,30) மதியம் 2:00 மணிக்கு துவங்குகிறது. லட்சுமண் ஸ்ருதி இன்னிசை, யோகி ராமலிங்கம் தலைமையில் யோகா நிகழ்ச்சிகள், முனைவர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம், நாட்டிய கலாலயாவின் பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பின், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி முதல்வர் பேசுகிறார்.

விழாவை, மதுரையில் ஏழு இடங்களில் மின்னணு வாகனங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை அரசு நடத்த உள்ளது.

முன்னதாக, மதுரை வரும் முதல்வர் பழனிசாமிக்கு விமான நிலையத்தில் இன்று காலை 10:00 மணிக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது. விழா நடக்கும் பாண்டி கோயில் மைதானத்தை அமைச்சர்கள் செல்லுார் ராஜு, ஆர்.பி.உதயகுமார், கலெக்டர் வீரராகவ ராவ் மற்றும் அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.

பிறகு அமைச்சர்கள் கூறியதாவது: முதல்வருக்கு, விமான நிலையத்தில் இருந்து வழிநெடுகிலும் அ.தி.மு.க., சார்பில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. விழா மைதானத்தில், காலையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர்., புகைப்பட கண்காட்சியை முதல்வர் திறந்து, கலைநிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார். பிறகு கே.கே.நகர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின் மதியம் 2 மணிக்கு துவக்க விழா நடைபெறும். இவ்வாறு தெரிவித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.