ஒலிம்பிக்கில் கபடி இடம் பெறும் என்ற நம்பிக்கையில் 8 வயது மகனை இப்போதே தயார் செய்யும் அனுப் குமார்
இந்தியாவில் கபடி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், வீர விளையாட்டான இதனை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும் களறமிங்கி உள்ளது மஷால் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்.
இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக நடத்திவரும் புரோ கபடி லீக் தொடரை இம்முறை ரசிகர்களைக் கவரும் வகையில் புதிய கோணத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். 5-வது சீசன் போட்டிகள் வரும் ஜூலை மாதம் 28-ம் தேதி தொடங்கி 13 வார காலத்துக்கு நடைபெற உள்ளது.
இந்த சீசனில் நடப்பு சாம்பிய னான பாட்னா, முன்னாள் சாம்பியன் களான யு மும்பா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட அணிகளுடன் புதிதாக ‘தமிழ் தலைவாஸ்’ அணியும் களமிறங்குகிறது. 5-வது சீசன் போட்டிகள் தொடர்பாக மும்பையில் இரு நாட்கள் ஊடக வியலாளர்கள் சந்திப்பு நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சியின் போது இந்திய கபடி அணியின் கேப்டனும், புரோ கபடி லீக் தொடரில் 2015-ம் ஆண்டு யு மும்பா அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்த 33 வயதான அனுப் குமார் நம்முடன் பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:
13 வயதில் கபடி விளையாடத் தொடங்கினேன். கபடி தான் என் வாழ்க்கையை மாற்றியது. பணம், புகழ், பெருமை அனைத்தையும் வழங்கியது. எங்கே சென்றாலும் என்னைப் பொதுமக்கள் அடை யாளம் கண்டுபிடித்து விடுவார்கள். ஹரியாணா காவல்துறையில் தற்போது சீனியர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறேன்.
சீருடையுடன் சென்றாலும் ரசிகர்கள் என்னை அடையாளம் காணத் தவறுவதில்லை. 17 வருடங் களாக கபடி விளையாடி வருகிறேன். கபடி விளையாடுவதற்கு முன்பு எனது வாழ்க்கை சாதாரணமாகவே இருந்தது. ஆனால் இதில் வளர்ச்சியடைய தொடங்கியதும் அனைத்தும் மாறியது.
2012-ம் ஆண்டு எனக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தது. இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். இந்த விருதுக்கான பட்டியல் 12 தினங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. வீட்டில் இருந்த நான் அதனைக் கேட்டதும் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். இது விருது வாங்கும் போது இருந்த மகிழ்ச்சியை விட அதிகமாக என்னை வியாபித்திருந்தது.
2011-ம் ஆண்டு தோள்பட்டை முறிவு ஏற்பட்டது. இதனால் 6 மாதங்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. கபடி வீரருக்கு உடலைப் பராமரிப்பதும், முறையான பயிற்சிகள் எடுப்பதும் அவசியம். உணவு கட்டுப்பாட்டில் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் ஒரு நாளைக்கு 2 லிட்டர் பால், பாதம் பருப்புகள், பழங்கள், முட்டையின் வெள்ளைக்கரு, சப்பாத்தி, காய்கறிகள் ஆகியவற்றையே உணவாக எடுத்துக்கொள்வேன். காலை உணவை வலுவாக உண்பேன். மதியம் பழங்கள் மட்டுமே, ஒருசில வேளைகளில் அரிசி சாதம் எடுத்துக் கொள்வேன்.
எனது ஆரம்பக் கட்ட காலத்தில் விளையாடும் செவனில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததில்லை. ஆனால் 2 வருட காலத்துக்கு பிறகு முன்னணி வீரராக வலம் வரத் தொடங்கினேன். சிஆர்பிஎப், ஏர் இந்தியா, ஹரியாணா ஆகிய அணிகளுக்காக விளையாடிய பின்னர் இந்திய அணியில் இடம் கிடைத்தது.
உலகக் கோப்பை, ஆசிய விளையாட்டு, தற்போது புரோ கபடி லீக் என வாழ்க்கை பயணிக்கிறது. பெரும்பாலான ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டுள்ளேன். 17 வருடங்களாக விளையாடும் செவனில் அங்கம் வகிக்கிறேன். கபடியில் எந்த ஒரு வீரரும் இப்படி சீரான முன்னேற்றம் காண்பது அரிது. ஆனால் அந்த முன்னேற்றம் எனக்கு சாத்தியமானது
ஹரியாணா முழுவதும் பரவ லாக கபடி விளையாடப்பட்டு வரு கிறது. அதிலும் குர்கான் மாவட்டத் தில் உள்ள எனது ஊரான பல்ரா கபடி கிராமமாகவே திகழ்கிறது. புரோ கபடி 5-வது சீசனில் எனது இலக்கு மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்வதுதான்.
2010, 2014-ம் ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான் இடம் பெற்றிருந்த இந்திய அணி தங்கம் வென்றது. இந்த இரு தொடர்களிலும் நான் துணை கேப்டனாக செயல்பட்டேன். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இந்திய அணி பட்டம் வென்ற போது நான் கேப்டனாக செயல்பட்டேன். இந்த 3 தொடர்களையும் எனது கபடி வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள்.
எனக்கு எட்டரை வயதில் குணால் என்ற மகன் உள்ளான். தற்போது 3-ம் வகுப்பு படித்து வருகிறான். இப்போதே அவன் முறையாக கபடி பயிற்சிகள் மேற்கொள்கிறான். நாங்கள் இருவரும் இணைந்து வீட்டில் விளையாடுவோம். குணால் என்னைவிட சிறந்த வீரராக வர வேண்டும் என நான் விரும்புகிறேன்.
அவனுடைய வயதில் நான் இதுபோன்று விளையாடிய தில்லை. குணால் படிப்பில் சராசரி மாணவன் தான். அவன் கபடியில் தான் அதிக கவனம் செலுத்துகிறான். இந்த விளையாட்டை அதிகம் நேசிக்கிறான். தற்போதுள்ள முன்னணி வீரர்கள் எந்த இடத்தில் சிறப்பாக விளையாடுவார்கள் என்பதையும், பல்வேறு நுணுக்கங் களையும் அறிந்து வைத்துள்ளான்.
ஒலிம்பிக்கில் கபடி இடம் பெறுவதற்கு இன்னும் 8 முதல் 10 வருடங்கள் ஆகும் என நினைக் கிறேன். அந்த நேரத்தில் குணால் என்னை விட சிறந்த வீரராக நிச்சயம் திகழ்வார். ஒலிம்பிக்கில் இந்திய அணிக்காக குணால் விளை யாட வேண்டும் என்பதே எனது கனவு.
5 வருடங்களுக்கு முன்பு இருந்தது போன்று இப்போது கபடி இல்லை. மஷால் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நடத்திய வீரர்கள் தேர்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இவர்களில் பலருக்கு புரோ கபடி லீக் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் இளம் வீரர்கள் முறையான பயிற்சி செய்யுங்கள், மூத்த வீரர்களிடம் இருந்து அதிகம் கற்றுக் கொள்ளுங்கள். சிறந்த அடித்தளம் அமையும் பட்சத்தில் உங்களாலும் உயர்ந்த இடத்தை எட்டிப்பிடிக்க முடியும்.
கேப்டன் என்பவர் தனது சொந்த ஆட்டத்தையும் விளையாட வேண்டும், நிலைமைக்கு தகுந்தபடி அணியில் உள்ள மற்ற வீரர்களையும் வழிநடத்த வேண்டும். களத்தில் அமைதியாகவும், நிதானமாகவும் செயல்படுவது என்பது சிறப்பு வாய்ந்த விஷயம்.
நாம் கோபப்பட்டு வீரரை திட்டினால் அவர், தன் மீது அழுத்தம் உருவாகுவதாக உணருவார். அதனால் மேலும் தவறுகளை செய்வார். இதை தவிர்ப்பதற்கு எளிய முறையில் வீரரிடம் எடுத்துக்கூற வேண்டும் அல்லது நமது களவியூகங்களை மாற்றி அமைக்க வேண்டும்.
நீண்ட நாட்கள் நடைபெறும் புரோ கபடி லீக் தொடரில் உடல் பராமரிப்பில் நன்கு கவனம் செலுத்த வேண்டும். அனைத்து அணியிலுமே சிறந்த வீரர்கள் இடம் பெற்றிருப்பார்கள். அவர்களை திறம்பட எதிர்கொள்ளும் அளவுக்கு நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும்.
புரோ கபடி லீக்கில் எங்கள் அணியில் தமிழகத்தை சேர்ந்த 3 வீரர்கள் உள்ளனர். எப்போதுமே தமிழக வீரர்கள் அதிவிரைவாக செயல்படும் திறன் கொண்டவர்கள். ரெய்டு செல்வதிலும், எதிரணியினர் ரெய்டு வரும் போது பாதுகாப்பு அரணில் வேகம் காட்டுவதிலும் மற்ற வீரர்களைவிட சிறந்தவர்கள். இவ்வாறு அனுப் குமார் கூறினார்.