குறைபாடுள்ள கருவைக் கலைக்கலாமா?: முடிவு செய்யும்படி கர்ப்பிணிக்கு கோர்ட் உத்தரவு
‘பல்வேறு குறைபாடுகள் உள்ள கருவைக் கலைப்பதால், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்’ என, மருத்துவக் குழு கூறியுள்ளதால், இது குறித்து, தன் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி, கர்ப்பிணிக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன், 24 வார கருவுக்கு, பல்வேறு இதயக் கோளாறுகள் இருப்பதால், அதை கலைக்க அனுமதிக்க வேண்டுமென, அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைப்பதற்கு அனுமதி மறுக்கும் சட்டத்தை எதிர்த்தும், அவர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த, நீதிபதிகள், ஏ.எம்.சப்ரே, எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், மேற்கு வங்க அரசுக்கும் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, ஏழு டாக்டர்கள் அடங்கிய குழு, மருத்துவப் பரிசோதனை செய்யவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.டாக்டர்கள் குழு அளித்துள்ள அறிக்கையில், கருவைக் கலைத்தால், அது, தாயின் உயிருக்கும் ஆபத்தாக அமைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ அறிக்கையின் நகலை, வழக்கு தொடர்ந்துள்ள, கர்ப்பிணிக்கு அளிக்க உத்தரவிட்டுள்ள கோர்ட், கருவை கலைப்பது குறித்த தன் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி கூறியுள்ளது. வழக்கின் விசாரணை, ஜூலை, 3க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.