ஓய்வு பெறும் நாளில் டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு 2 ஆண்டு பணி நீட்டித்து உத்தரவு
தமிழக டிஜிபி டி.கே ராஜேந்திர னுக்கு இரண்டாண்டுகள் பணி நீட்டிப்பு செய்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உளவுப் பிரிவு டிஜிபி.யாக நியமிக்கப்பட் டார். காலியாக இருந்த சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பதவியையும் அவர் கூடுதலாக கவனித்து வந்தார்.
நேற்றுடன் அவரது பதவி காலம் நிறைவு பெறுவதாக இருந்தது. புதிய போலீஸ் டிஜிபியாக யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. தமிழக பிரிவு டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ராதாகிருஷ்ணன், காவலர் பயிற்சி பள்ளி இயக்குநர் மகேந்திரன் ஆகியோரில் ஒருவர் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்படலாம் என பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும், கூடுதல் டிஜிபியாக உள்ள ஜாங்கிட், திரிபாதி ஆகியோ ருக்கு பதவி உயர்வு கொடுத்து அவர்களில் ஒருவரை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கலாம் எனவும் கூறப்பட்டது.
இதற்கிடையில், தமிழக தலை மைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், உள்துறை செயலாளர் நிரஞ் சன் மார்டி உள்ளிட்ட அதிகாரிகள் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் குறித்து நேற்றும் ஆலோ சித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஏற்கெனவே, தமிழக பொறுப்பு டிஜிபியாக உள்ள டி.கே. ராஜேந்திரனுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி அவரை தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு முன்னதாக டிஜிபி அலுவலக அதிகாரிகள் கூறுகையில், “டி.கே. ராஜேந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அப்போது அவருக்கு பணி நிறைவு நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கும். ஆனால், எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை. எனவே, அவருக்கு பணி நீட் டிப்பு வழங்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது” என்றனர்.
டிஜிபி அந்தஸ்தில் உள்ள ராதாகிருஷ்ணன் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். ஜார்ஜ் செப் டம்பர் மாதமும், அர்ச்சனா ராம சுந்தரம் அக்டோபரிலும் ஓய்வு பெறுகின்றனர். மகேந்திரன் அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளார். டி.கே.ராஜேந்திரனுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதன் மூலம் இவர்கள் யாரும் இனி சட்டம்-ஒழுங்கு டிஜிபி ஆவதற்கு வாய்ப்பு இல்லை.
1984-ம் ஆண்டு பணியில் சேர்ந்த டி.கே.ராஜேந்திரன் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சட்டம் – ஒழுங்கு பிரிவில் சிறப்பாக பணி யாற்றியவர். மாநில உளவுப்பிரிவு அதிகாரியாகவும் இவர் திறம்பட பணியாற்றியுள்ளார் என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
பணி நீட்டிப்பில் 3-வது டிஜிபி
ஏற்கெனவே டிஜிபியாக ஓய்வு பெறும் நாளில் ராமானுஜத்துக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதேபோல் டிஜிபி அசோக்குமாருக்கும் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த வரிசையில் தற்போது டி.கே ராஜேந்திரன் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.