Breaking News
2-வது நாளாக கடையடைப்பு: கதிராமங்கலத்தில் 10-ம் தேதி கிராமத்துக்குள் நுழைய அனைத்துக் கட்சிகள் முடிவு

கதிராமங்கலத்தில் காவல் துறையை கண்டித்து நேற்று 2-வது நாளாக கடையடைப்பு நடத்தப்பட்டது. இதற்கிடையே, ஜூலை 10-ம் தேதி கதிராமங் கலம் கிராமத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவது என தஞ்சாவூரில் நடைபெற்ற அனைத் துக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங் கலத்தில் கடந்த 30-ம் தேதி எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதில், பலர் காயமடைந்தனர். போலீஸா ரின் தடியடியைக் கண்டித்து, கதிராமங்கலத்தில் நேற்று முன்தினம் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. நேற்று 2-வது நாளாக கடையடைப்புப் போராட்டம் தொடர்ந்தது.

இதையடுத்து, கிராமத்தைச் சுற்றிலும் 200 போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓஎன்ஜிசி கிணறு உள்ள 11 இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் வீ்ட்டை விட்டு வெளியே வரவில்லை.

இதற்கிடையே, கதிராமங்கலத் தில் மக்களை சந்தித்து பேசு வதற்காக வந்த மதிமுகவின் மாநில விவசாய பிரிவு செயலாளர் ஆடுதுறை முருகன் உட்பட 30 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல, கதிராமங்கலம் கடை வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்

இதற்கிடையே, போலீஸாரின் தாக்குதலைக் கண்டித்து அனைத் துக் கட்சி நிர்வாகிகள் கூட்டம், தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்தார். இதில், திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர் வாகிகள் கலந்து கொண்டனர்.

நுழைவுப் போராட்டம்

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக அமைச்சர்கள் குழு கதிரா மங்கலம் சென்று மக்களை சந் தித்து, அவர்களின் முறையீட் டைக் கேட்டு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். கதிரா மங்கலத்தில் குவிக்கப் பட்டுள்ள போலீஸாரை வரும் 9-ம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டும்.

இல்லையென்றால் வரும் 10-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலை வர்கள் தலைமையில், விவசாயி களுடன் இணைந்து, தடையை மீறி கதிராமங்கலத்தில் நுழைந்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.

உரிய இழப்பீடு: ஆட்சியர் உறுதி

தஞ்சாவூர் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை நேற்று மாலை கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்ட வயல் பகுதியை பார்வையிட்டதுடன், அப்பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரைப் பருகி ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கடந்த 30-ம் தேதி கச்சா எண்ணெய் பரவிய வயலுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். அந்த வயலை ஏற்கெனவே இருந்த நிலைக்கு ஓஎன்ஜிசி நிர்வாகம் சீரமைத்துத் தரும். இப்பகுதியில் 11 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் தினமும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் 2 இடங்களில் புதிதாக ஆழ்குழாய் அமைத்து குடிநீ்ர் வசதி செய்து தரும் பணி தொடங்கியுள்ளது.

மக்களுக்கான பாதுகாப்புப் பணியில் தான் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு தினங்களில் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது ஐயத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.