Breaking News
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியாவின் வெற்றி தொடருமா? இலங்கையுடன் இன்று மோதல்

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் வெற்றியை தொடரும் உத்வேகத்தில் உள்ள இந்திய அணி இன்று இலங்கையுடன் மோதுகிறது.

பெண்கள் உலக கோப்பை
8 அணிகள் இடையிலான 11–வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இதில் தொடர்ந்து கலக்கி வரும் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களில் இங்கிலாந்தை 35 ரன்கள் வித்தியாசத்திலும், வெஸ்ட் இண்டீசை 7 விக்கெட் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 95 ரன்கள் வித்தியாசத்திலும் பந்தாடி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.

இந்திய அணி
இந்த நிலையில் இந்திய அணி தனது 4–வது லீக்கில் இலங்கையுடன் இன்று (புதன்கிழமை) டெர்பியில் மோதுகிறது. பலம் வாய்ந்த அணியாக திகழும் இந்தியா இதிலும் வெற்றி கண்டால் அரைஇறுதியை வெகுவாக நெருங்கி விடும். பேட்டிங்கில் மந்தனா, பூனம் ரவுத், மிதாலிராஜ், விக்கெட் கீப்பர் சுஷ்மா வர்மா ஆகியோரும், பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் எக்தா பிஷ்ட், பூனம் யாதவ், தீப்தி ‌ஷர்மாவும் வலு சேர்க்கிறார்கள்.

மிதாலிராஜ் கூறுகையில், ‘அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்காமல் இருப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவோம். ஏனெனில் மளமளவென விக்கெட்டுகளை இழக்கும் போது பின்வரிசை ஆட்டக்காரர்களுக்கு நெருக்கடி உருவாகும். எனவே சிறப்பான பார்ட்னஷிப்பை அமைப்பது அவசியமாகும். பந்து வீச்சை எடுத்துக் கொண்டால் சுழற்பந்து வீச்சாளர்கள் அசத்துகிறார்கள். முதல் இரு ஆட்டங்களுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தானுக்கு எதிரான லீக்கில் நமது வேகப்பந்து வீச்சாளர்களும் ஓரளவு நன்றாக செயல்பட்டனர். இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில், எத்தகைய ஆடுகளம் தரப்படுகிறது என்பதை பொறுத்து வியூகங்களை வகுப்போம்’ என்றார்.

இலங்கை எப்படி?
சுழற்பந்து வீச்சாளர் இனோகா ரனவீரா தலைமையிலான இலங்கை அணி இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்கவில்லை. இதுவரை ஆடியுள்ள 3 ஆட்டங்களிலும் (நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக) தோல்வியே மிஞ்சியது. அந்த அணி சமாரி அட்டப்பட்டுவைத் தான் மலைபோல் நம்பி இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 178 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார். ஆனாலும் அவரது சதத்திற்கு பலன் கிடைக்கவில்லை.

இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அவர்களின் அரைஇறுதி வாய்ப்பு மங்கி விடும். அதனால் முடிந்த வரை கடுமையாக போராடுவார்கள். இலங்கை கேப்டன் ரனவீரா கூறுகையில், ‘எங்களது பேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறோம். ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டங்களில் 200 ரன்களுக்கு மேல் எடுத்தோம். இதுவே எங்களுக்கு பெரிய வி‌ஷயமாகும். ஒரு அணியாக இந்தியாவுக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம்’ என்றார்.

இதுவரை…
இந்தியாவும், இலங்கையும் இதுவரை 25 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 23–ல் இந்தியாவும், ஒன்றில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மற்ற ஆட்டங்களில் இங்கிலாந்து–தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.