நீதித்துறையை நகைப்புக்குரியதாக்கி விட்டார் கர்ணன்: சுப்ரீம் கோர்ட்
‛தனது தவறான செயல்பாடுகளால் நீதித்துறையை கர்ணன் நகைப்புக்குரியதாக்கி விட்டார்’ என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
சிறை தண்டனை:
கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக இருந்த, தமிழகத்தைச் சேர்ந்த, சி.எஸ்.கர்ணனுக்கு, கோர்ட் அவமதிப்பு வழக்கில், சுப்ரீம் கோர்ட் அமர்வு, ஆறு மாத சிறை தண்டனை விதித்தது. தலைமறைவாக இருந்த கர்ணன், ஜூன் 20ல் கைது செய்யப்பட்டு, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தீரப்பின் விவரம்:
இந்நிலையில் கர்ணனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தீரப்பின் முழுவிவரம் நேற்று வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சக நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த கர்ணன், தன்னிச்சையாக செயல்பட்டு பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டார். சுப்ரீம் கோர்ட் தலையிட்ட பின்னும் பொறுப்பற்ற வகையில் அவர் கூறும் கருத்துகளை நிறுத்திக் கொள்ளவில்லை.
அவதூறு:
தேவையில்லாமல் அவதூறு பரப்பிய அவர், குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை. தனது நடவடிக்கைகளுக்கு தன் பதவியையும், ஜாதியையும் பயன்படுத்தி கொண்டுள்ளார். உச்ச கட்ட நடவடிக்கையாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு எதிராகவே அவர் உத்தரவு பிறப்பித்தார். அவர் மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்கியமாக உள்ளது மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது.
தண்டனை:
நீதித்துறையை கேலிப் பொருளாக்கி, நகைப்புக்குரியதாக்கி விட்ட அவரது செயல்பாடு, இந்தியா மட்டுமன்றி, வெளிநாட்டு ஊடகங்களிலும் கவனம் பெற்றன. அனைத்து விவகாரங்களையும் ஆராய்ந்த பின்னே அவருக்கு தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.