Breaking News
வேகத்தடையில் வேகமாக ஏறி இறங்கியதால் பேருந்துக்குள் இருந்த பெண் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு: கோயம்பேட்டில் அதிகாலை நடந்த சோகம்

கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்துக்குள் போடப்பட்டிருந்த வேகத்தடையை அரசு பேருந்து அதிவேகமாக கடந்துள்ளது. இதில், பேருந்து நிலை குலைந்து அதற்குள் பயணம் செய்த பெண் பயணி பேருந்துக்குள்ளேயே தூக்கி வீசப்பட்டு உயிர் இழந்தார்.

பெரம்பலூர் பாரதிதாசன் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சுமதி (40). இவர் பெரம்பலூரில் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணி செய்து வந்துள்ளார்.

இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, சுமதிக்கு மேல் சிகிச்சை அளிக்க அவரது உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு சுமதியை அவரது அண்ணண் ஆனந்த் என்ற ஆனந்த குமார் திருச்சியில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு செல்லும் அரசு பேருந்தில் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.

நேற்று காலை 5 மணிக்கு அரசு பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வந்துள்ளது. பேருந்து ஓட்டுநர் பெரம்பலூரைச் சேர்ந்த ஜெயராமன் (55) என்பவர் பேருந்தை அதிவேகமாக ஓட்டியுள்ளார். குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்துக்குள் போடப்பட்டிருந்த வேகத்தடையை மின்னல் வேகத்தில் கடந்துள்ளார். இதனால், பேருந்து அதிர்ந்துள்ளது. பேருந்துக்குள் இருக்கையில் அமர்ந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்த சுமதி மேல்நோக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதனால், சுமதியின் தலை மேற்கூரையில் மோதி ரத்தம் பீறிட்டது. அதே வேகத்தில் வலது புறம், இடதுபுறமும் மாறி மாறி விழுந்து காயம் அடைந்தார். சம்பவ இடத்திலேயே ரத்தம் வடிந்த நிலையில் சுமதி உயிர் இழந்தார்.

அவருடன் பேருந்தில் பயணம் செய்த உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த கந்தன் (40) என்பவரின் பல் உடைந்தது. அவரது தலையிலும் ரத்தகாயம் ஏற்பட்டது. இதேபோல் பேருந்துக்குள் இருந்த மேலும் சில பயணிகளும் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் நெடுமாறன் சம்பவ இடம் விரைந்தார். சுமதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். காயம் அடைந்தவர்களும் சிகிச்சைக்காக அதே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிவேகமாக அரசு பேருந்தை வேகத்தடையில் இயக்கிய ஓட்டுநர் ஜெயராமனை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.