இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தென் ஆப்ரிக்காவுக்கு 331 ரன்கள் இலக்கு
இங்கிலாந்து – தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 458 ரன்களை எடுத்தது. இந்த இன்னிங்ஸில் ஜோ ரூட் 190 ரன்களைக் குவித்தார். இதைத்தொடர்ந்து தங்கள் முதல் இன்னிங்ஸை ஆடவந்த தென் ஆப்ரிக்க அணி, 361 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தென் ஆப்ரிக்க அணியை விட முதல் இன்னிங்ஸில் 97 ரன்கள் கூடுதலாக பெற்றிருந்த இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை ஆடவந்தது. 3-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை எடுத்திருந்தது. அலஸ்டர் குக் 59 ரன்களுடனும், பாலன்ஸ் 22 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் மோர்கெல் வீசிய பந்தில்
பவுமாவிடம் கேட்ச் கொடுத்து அலஸ்டார் குக் ஆட்டம் இழந்தார். 192 பந்துகளை எதிர்கொண்ட அவர், 69 ரன்களைச் சேர்த்திருந்தார்.
குக் அவுட் ஆனதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் விக்கெட்கள் மளமளவென்று சரிந்தன. பாலன்ஸ் 34, ரூட் 5, பேர்ஸ்டோவ் 51, ஸ்டோக்ஸ் 1, மொயின் அலி 7 ரன்களில் அவுட் ஆக இங்கிலாந்து அணி 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்ரிக்க அணி வெற்றிபெற 331 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடவந்த தென் ஆப்ரிக்க அணி, தேநீர் இடைவேளியின்போது 3 விக்கெட் இழப்புக்கு 25 ரன்களை எடுத்திருந்தது.