Breaking News
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: 4-வது சுற்றுக்கு பெடரர் தகுதி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்றுக்கு ரோஜர் பெடரர் தகுதி பெற்றுள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்களுக்கான பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது சுற்றுப் போட்டியில், சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரர், ஜெர்மனியின் மிஷா செரேவை எதிர்கொண்டார். இப்போட்டியில் ரோஜர் பெடரர் 7-6, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்குமுன்னேறுவது இது 15-வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அவர் பெற்றுள்ள 317-வது வெற்றியாகும் இது. திங்கள்கிழமை நடக்கவுள்ள 4-வது சுற்றுப் போட்டியில் ரோஜர் பெடரர், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்த்து ஆடவுள்ளார்.

ஆண்களுக்கான பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் ஆஸ்திரிய வீரர் டோமினிக் தயிம், 7-5, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்க வீரரான ஜரெட் டொனால்ட்சனை வென்றார். மற்றொரு போட்டியில் தாமஸ் பெர்டிக், 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் டேவிட் பெரரை வென்றார்.

சானியா மிர்சா முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸில் மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் இந்தியாவின் சானியா மிர்சா 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவில் குரோஷியாவின் இவான் டோகிக்குடன் ஜோடி சேர்ந்து ஆடிய சானியா மிர்சா, 7-6, 6-2 என்ற நேர் செட்களில் ஜப்பானின் யசுகே வடானுகி, மகாடோ நினோமியா ஜோடியை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 1 மணிநேரம் 18 நிமிடங்களில் முடிந்தது. 3-வது சுற்றில் இந்த ஜோடி நடப்பு சாம்பியன்களான ஹென்ரி கோண்டினென் – ஹிதர் வாட்சன் ஜோடியை எதிர்த்து ஆடவுள்ளது.

பெண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில் பெல்ஜியத்தின் கிர்ஸ்டன் பிளிப்கென்சுடன் ஜோடி சேர்ந்து ஆடிய சானியா மிர்சா, 2-வது சுற்றில் இங்கிலாந்தின் நவோமிபிராடி – ஹித்ர் வாட்சன் ஜோடியை 6—3, 3—6, 6—4 என்ற செட்கணக்கில் போராடி வென்றது. அடுத்த சுற்றில் சானியா ஜோடி மார்டினா ஹிங்கிஸ் – யங் ஜான் சான் ஜோடியை எதிர்த்து விளையாடும்.

கலப்பு இரட்டையர் பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, கனடாவின் காப்ரியல்லா டப்ரோஸ்கி ஜோடி, 7—6, 7—5 என்ற செட் லண்டன்கணக்கில் பாப்ரிஸ் மார்ட்டின் – ரலுகா ஒலரு ஜோடியை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறியது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.