Breaking News
கேரளா திரையுலகின் ‘தாதா’ திலீப்

நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப், பல ஆண்டுகளாக கேரள திரையுலகத்தை ஒரு தாதா போல் ஆட்டிப்படைத்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

முதல்வர் ஆதரவு
இது குறித்து கேரள திரையுலக வட்டாரங்கள் கூறியுதாவது:
கேரள நடிகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நல்ல உறவு உள்ளது. நடிகை பாவனா கடந்த பிப்., 17 ம் தேதி காரில் கடத்தப்பட்டு, மானபங்கப்படுத்த சம்பவம் நடந்த உடன், முதல்வர் பினராயி விஜயன் அந்த சம்பவத்தை சாதாரணமாகவே எடுத்துக்கொண்டார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘ அவர்களுக்கு இடையே ( பாவனா மற்றும் கடத்தல் பேர்வழிகள்) என் ன நடந்தது என்பது நமக்கு தெரியாது. எனினும், அது போன்ற சம்பவங்கள் நடந்து இருக்க கூடாது’ என்று தான் கூறினார்.

திசை திருப்பிய சேனல்:

கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், கைராளி ‘டிவி’ சேனல், பாவனா சம்பவம் நடந்த உடன் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதில், நடிகர் திலீப் மற்றும் நடிகை பாவனா இடையே நல்ல உறவு உள்ளது என்று திரும்ப திரும்ப கூறிக் கொண்டே இருந்தனர்.

இந்த ‘டிவி’ சேனலின் தலைவராக நடிகர் மம்முட்டி உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு கேரள திரையுலகமும், மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. ‘டிவி’ சேனல் சார்பில் மன்னிப்பும் கேட்கப்பட்டது.

அதே நேரத்தில் முதல்வர் பினராயி விஜயன், தொடர்ந்து திரையுலக ஆதரவு நிலையில் தான் இருந்தார். ‘ பாவனா சம்பவம் என்பது முக்கிய குற்றவாளி மற்றும் மீடியாவின் கற்பனையில் எழுந்த ஒன்று. இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் யார் உள்ளனர் என தேடி அலைய வேண்டாம். இது போன்ற குற்றங்களை அவர்கள் செய்ய மாட்டார்கள்’ என்றெல்லாம் பேட்டி கொடுத்தார்.

‘அம்மா’ அமைப்பு
பாவனா விவகாரம் தொடர்பாக, ஜூன், 28ம் தேதி நடிகர் திலீப்பிடம், 13 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான, ‘ அம்மா’வின் தலைவரும், எம்.பி.,யுமான இன்னொசென்ட், ‘ அம்மா சங்கத்தை பொறுத்தவரை நடிகர் திலீப்பும், பாதிக்கப்பட்ட நடிகையும் குழந்தைகள் தான்’ என்று, நடிகர் திலீப்பை விட்டுக் கொடுக்காமல் பேட்டி கொடுத்தார். இத்துடன், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களும், நடிகர்களுமான முகேஷ், கணேஷ் ஆகியோர் திலீப்புக்கு ஆதரவாகவே பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது நிருபர்கள், ‘ இந்த விவகாரத்தில் திலீப் அப்பாவி என கருதுகிறீர்களா’ என, கேட்ட போது இரண்டு பேரும் கடுமையாக சத்தம் போட்டனர்.

பாவனா வழக்கில் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில். இவர் நடிகர் முகேஷிடம் ஒரு ஆண்டுக்கு மேலாக கார் டிரைவராக பணியாற்றியவர். இந்த சுனில், இதற்கு முன் ஒரு நடிகையை கடத்த முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த நடிகையின் கணவர் உஷராக நடவடிக்கை எடுத்ததால், அந்த கடத்தல் சம்பவம் நடக்க முடியாமல் போனது. இதன் பிறகு தான் நடிகை பாவனா சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிமினல்களுடன் தொடர்பு
‘பல்சர் சுனில் ஒரு கிரிமினல் என்பது எனக்கு தெரியாது. அது தெரியாமலேயே அவருக்கு டிரைவர் பணி கொடுத்தேன்’ என, நடிகர் முகேஷ் முன்பு தெரிவித்து இருந்தார். ஆனால், கேரள நடிகர்களுக்கும் கிரிமினல்களுக்கும் மறைமுக தொடர்பு உள்ளது என்பதே உண்மை. தங்களை எதிர்த்து பேசுபவர்களை அந்த கிரிமினல்கள் மூலம் தான் நடிகர்கள் பழி வாங்குகின்றனர். பல ஆண்டுகளாக இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், நடிகை பாவனா மட்டும் தான் தைரியமாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பிறகே, கேரள திரையுலகில் இப்படி ஒரு மறைமுக கும்பல் செயல்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நடிகை பாவனா சம்பவம் நடந்த பிறகு திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியார் மற்றும் சில நடிகைகள், இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கினார். திரையுலகில் பெண்களை பாதுகாக்க வேண்டும் என்பதே அந்த அமைப்பின் நோக்கம்.

இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனையும் சந்தித்து பேசினர். அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள நடிகை பார்வதி, ‘ பட வாய்ப்பு பெற படுக்கையை பகிர வேண்டிய கட்டாயம் கேரள திரையுலகில் உளளது. ஏராளமானோர் நேரிடையாகவும், வெளிப்படையாகவும், ‘படுக்கையை பகிர தயாரா’ என்று கேட்கின்றனர்’ என்று பேட்டி அளித்தார்.

அத்துடன் நடிகர்கள் இன்னொசென்ட், திலீப் மற்றும் சலீம் குமார் ஆகியோர் பெண்களுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள் குறித்து பெண்கள் கமிஷன் விசாரிக்கவும் அந்த அமைப்பு ஏற்பாடு செய்தது. ஆனால், மேலிட செல்வாக்கு காரணமாக அவர்கள மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

போலீஸ் உயர் அதிகாரி
கடந்த ஜூன், 28 ம் தேதி தான் நடிகர் திலீப்பிடம் முதல் முறையாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பிறகு கூடுதல் டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ள ஒரு உயர் போலீஸ் அதிகாரி, திலீப்பின் நண்பரும், இயக்குனருமான நாதிர் ஷாவை ஒரு ஓட்டலில் சந்தித்து பேசியுள்ளார். இருவரும் பாவனா வழக்கு விசாரணை எந்த பாதையில் செல்கிறது; திலீப்பிற்கு பாதிப்பு வருமா என்பது குறித்தெல்லாம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த அளவுக்கு கேரள நடிகர்களுக்கு செல்வாக்கு உள்ளது. அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் நெருங்கி பழகி வருகின்றனர். ரியல் எஸ்டேட், ஓட்டல் தொழில் உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்துள்ளனர். இது தவிர, ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றனர்.

பழி வாங்குவதில் ராஜா
நடிகர் திலீப்பிற்கு சொந்தமாக பல தியேட்டர்கள், ஓட்டல்கள், படபிடிப்பு யூனிட்கள் உள்ளன. தன் சொல்படி கேட்காத திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை மிகவும் கஷ்டப்படுத்துவார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, நடிகை பாவனா – நடிகர் திலீப் இடையே மோதல் உருவாகி விட்டது. அதன் காரணமாக, மலையாள திரைப்படங்களில் பாவனாவிற்கு வாய்ப்பு கிடைப்பதை திலீப் தடுத்து வந்துள்ளார்.

கேரள திரையுலகம், நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் மற்றும் திலீப் ஆகியோரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் என அனைவரையும் மூன்று பேர் கட்டுப்படுத்தி வைத்து உள்ளனர். யாராவது எதிர்த்து கேள்வி கேட்டால், அவ்வளவு தான். வாழ விட மாட்டார்கள்.

திரைப்பட இயக்குனர் வினயன், நடிகர் திலீப் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர். அவர் கூறுகையில், ” தன்னை எதிர்ப்பவர்களை, திலீப் மன்னிக்கவே மாட்டார். அவர்களை பழி வாங்குவதில் தீவிரமாக இருப்பார். அவர் அளவுக்கு பழி வாங்கும் போக்கு அரசியல்வாதிகளிடம் கூட இருந்தது இல்லை,” என்றார்.

கேரளாவில், 19 திரைப்பட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து மலையாள திரைப்பட தொழிற்கலைஞர்கள் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி இருந்தன. கடந்த 2007 ம் ஆண்டில் இந்த சங்கத்தின் பொதுச் செயலாளராக இயக்குனர் வினயன் இருந்துள்ளார்.

அப்போது இயக்குனர் துளசிதாஸ் என்பவரிடம் முன்பணம் வாங்கி விட்டு அவரது படத்தில் நடிக்க திலீப் மறுத்துவிட்டார். படபிடிப்பு நடந்து கொண்டு இருந்த இடத்தில் திலீப்பை சந்திக்க துளசிதாஸ் சென்ற போது, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எதிரே இருந்த மற்றொரு நாற்காலியில் இரண்டு கால்களையும் போட்டபடி திலீப் அமர்ந்து இருந்தார். எதிரே துளசிதாஸ் நின்றபடி தான் பேச வேண்டும் என்ற நிலையை திலீப் ஏற்படுத்தினார். அவர் கூறிய கதைகள் எதுவும் சரியில்லை என்று விமர்சனம் செய்தார்.

துளசிதாஸ் அவமானப்படுத்தப்பட்ட விஷயத்தை வினயன் தீவிரமாக எடுத்துக் கொண்டார். திலீப், படபிடிப்பில் பங்கேற்க தடை விதித்தார். இதன் விளைவு, வினயன் பொதுச் செயலாளராக இருந்த சங்கம் இரண்டாக உடைக்கப்பட்டது. நடிகர்கள் சங்கமான, ‘அம்மா’, இயக்குனர் வினயனுக்கு தடை விதித்தது.

மூத்த நடிகர் திலகன் கதி
கேரள திரையுலகில், மூத்த நடிகர் திலகனுக்கு பெரிய பெயர் இருந்தது. மூன்று முறை தேசிய விருது பெற்றவர்; பத்ம ஸ்ரீ விருது பெற்றவர். ஆனால், இயக்குனர் வினயன் படத்தில் நடிக்க திலகன் முன்வந்ததால், திலீப் கோபத்திற்கு ஆளானார்.
அப்போது திலீப் நடித்து வந்த, ‘கிறிஸ்டியன் பிரதர்ஸ்’ என்ற படத்தில் இருந்து திலகன் நீக்கப்பட்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு வினயனுக்கு விதிக்கப்பட்ட தடையை, கடந்த மாதம் தான், ‘அம்மா’ அமைப்பு விலக்கி கொண்டது. அந்த அளவுக்கு வினயனை திலீப் பழிவாங்கினார். நடிகர் திலகனுக்கு கடைசி வரை மன்னிப்பே வழங்கப்படவில்லை. கேரள திரையுலகத்தால் விலக்கி வைக்கப்பட்ட நடிகர் திலகன் மிகுந்த சோகத்தில் கடந்த 2012ல் இறந்து போனார். அவர் கடைசி வரை, ‘ திலீப் என் எதிரி’ என்று வெளிப்படையாகவே கூறி வந்தார்.

இதைபோல், கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தையும் திலீப் கடந்த மாதம், இரண்டாக உடைத்தார். இதற்கு மம்முட்டி, மோகன்லால் ஆசிர்வாதமும் இருந்தது. தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் லிபர்ட்டி பஷீர் கூறுகையில்,’ திலீப் கைதுக்கு பிறகு கேரள திரையுலகில் மாபியா ராஜ்ஜியம் முடிவுக்கு வந்துள்ளது’ என்றார்.

திலீப் கைதுக்கு பிறகு, பல இயக்குனர்கள் வெளிப்படையாக பேச துவங்கியுள்ளனர். மும்பை திரையுலகை தாவூத் கும்பல் மிரட்டி வருவது போல, கேரள திரையுலகத்தை திலீப் கும்பல் மிரட்டி வந்துள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். சக நடிகர்களின் படங்கள் வெளியாவதையும் அவர் தடுத்து வந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

கறுப்பு பணம் முதலீடு
திரைப்பட விமர்சகரும், சமூக சேவகருமான கே.எம். ஷாஜகான் கூறுகையில், ” வளைகுடா நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கறுப்பு பணம், கேரள திரையுலகில் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால், இதை மாநில அரசு கண்டு கொள்வது இல்லை. நடிகர் மம்முட்டி நடித்த கடைசி வெற்றி படம், 2015ம் ஆண்டு வெளியான, ‘ பாஸ்கர் தி ராஸ்கல்’ படம் தான். ஆனால், அதன் பிறகு படங்கள் ஓடாவிட்டாலும் தொடர்ந்து நடிந்து கொண்டு தான் இருக்கிறார். இதற்கு பணம் எங்கிருந்து வருகிறது,” என கேள்வி எழுப்பி உள்ளார்.

கேரள நடிகர்களுடன் முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது என கேரள மாநில பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.