அனைத்து துறைகளிலும் லஞ்சம் :நடிகர் கமல்ஹாசன் ஆவேசம்
அனைத்து துறைகளிலும் ஊழலும், லஞ்சமும் உள்ளது என நடிகர் கமல் ஹாசன் கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் ‛‛பிக்பாஸ்” என்ற நிகழ்ச்சிக்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டள்ளது.இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார் பேட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ” என்னை கைது செய்ய வலியுறுத்தும் கூட்டத்திற்கு பதில் சொல்லும் கடமை எனக்கு கிடையாது.
சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது அந்த சட்டம் என்னை பாதுகாக்கும்.நான் கைதாகும் சூழ்நிலை ஏற்பட்டால் அதை நான் தவிர்க்க மாட்டேன் சட்டப்படி சந்திப்பேன். என்னை கைது செய்ய சொல்பவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சாரத்தை கெடுக்கிறது என்றால், முத்தக் காட்சியில் நடித்த போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அதில் கெட்டு போகாத கலாச்சாரம் இதில் கெட்டு போகிறதா. இந்தி தெரியாததால் பிக்பாஸ் நிகழ்ச்சி பலருக்கு புரியாமல் இருக்கலாம்
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. என்னை நம்பும் மக்களுக்கு நல்ல விருந்தளிக்க கடமைபட்டிருக்கிறேன் மற்றவர்களுக்கு அல்ல. தசாவதாரம் படத்தின் போது என்னை கொண்டாடினார்கள் இப்போது என்னை எதிர்க்கிறார்கள்.
நடிகை பாவனா துன்புறுத்தப்பட்ட வழக்கில் சட்டம் தனது கடமை சரியாக செய்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர் பக்கம் நான் உள்ளேன். ஜி.எஸ்.டி.வரியை நாங்கள் கோரியது போல் குறைக்க வில்லை. ஆனால் வரி குறைக்கப்பட்டிருக்கிறது.இதை நான் மனதார பாராட்டுகிறேன். குளிர்பானங்களுக்கு அளிக்கப்படும் மரியாதை சினிமாவிற்கு வழங்கப்படவில்லை என்பது வருத்தம்.
அனைத்து துறைகளிலும் ஊழலும், லஞ்சமும் உள்ளது. சிஸ்டம் சரியல்ல என்று முதலில் கூறியது நான் தான்.நடிகர் ரஜினிகாந்த் கூறிய சிஸ்டம் சரியல்ல என்ற கருத்தை நான் எதிர்க்கவில்லை . தமிழக அரசியலில் எனக்கும் , உங்களுக்கும் பங்கிருக்கிறது.கிரிக்கெட் எவ்வளவு தேவையோ அவ்வளவு தேவை பிக்பாஸ் ” என கூறினார்.