பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த ‘பேஸ்புக்’
‘பேஸ்புக் கணக்குகளுடன், அதை பயன்படுத்துவோரின் மொபைல் போன் எண்ணை இணைக்க வேண்டும்’ என, பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை, பேஸ்புக் நிர்வாகம் மறுத்து விட்டது.
சமூக வலைதளங்களில் ஒன்றான, ‘பேஸ்புக்’கில், ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். ‘இ – மெயில்’ முகவரி மூலம், பேஸ்புக்கில் சேருகின்றனர். இதில், தங்கள் எண்ணங்கள், கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மொபைல் எண்:
இந்நிலையில், பேஸ்புக் நிர்வாகத்துக்கு, பாகிஸ்தான் அரசு விடுத்த கோரிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது: பேஸ்புக் பயன்படுத்துவோரில் சிலர், வெளியிடும் கருத்துக்களால், சமூகத்தில் மோதல் ஏற்படுகிறது; அது கலவரமாக மாறி, உயிர் பலி ஏற்படுகிறது; இதை தடுக்க வேண்டும். சர்சசைக்குரிய கருத்துக்களை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக, பேஸ்புக் கணக்குகளில், அதை பயன்படுத்துவோரின் மொபைல் போன் எண்ணை இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மறுப்பு:
ஆனால், பேஸ்புக் நிர்வாகம், இதை ஏற்க மறுத்து விட்டது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு பேஸ்புக் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது: பேஸ்புக் கணக்கில், அதன் பயன்பாட்டாளர்களின் மொபைல் எண்ணை இணைப்பது சாத்தியமில்லை. இ – மெயில் முகவரி மூலம், கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய கருத்து என தெரிந்தால், அதை நாங்களே நீக்கி விடுவோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.