Breaking News
‘அரசிலுக்கு வர தைரியம் இருக்கிறதா…’: நடிகர் கமலுக்கு அமைச்சர்கள் சவால்

ஆட்சியை விமர்சித்த நடிகர் கமலுக்கு எதிராக, அ.தி.மு.க., அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ‘அரசிலுக்கு வர தைரியம் இருக்கிறதா…’ என, சவால் விடுத்துள்ளனர்.

‘தமிழகத்தில், அனைத்து மட்டங்களிலும் ஊழல் மலிந்து விட்டது’ என, நடிகர் கமல், சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு, ஆளும் கட்சியினர் எதிர்ப்பும், எதிர்க்கட்சியினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். அரசை விமர்சித்த கமலை, அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

அமைச்சர்கள் நேற்று கூறிய கருத்துகள்:

அமைச்சர் ஜெயகுமார்: ஜெ., இருக்கும் வரை வாயை பொத்திக்கொண்டிருந்த கமல், இன்று வாயை திறப்பது வேடிக்கையாக உள்ளது. ஜெ., அரசு மீது சேற்றை வாரி இறைப்பதால், பதில் கொடுக்கிறோம். அரசியலுக்கு வர அவருக்கு தைரியமில்லை. கமல் முட்டு கொடுக்கும் நிலையில், தி.மு.க., பரிதாபமாக நிலையில் உள்ளது.

அமைச்சர் சி.வி.சண்முகம்: ஜனநாயகம் குறித்து பேசி உள்ளார். குற்றச்சாட்டுக்கு பதில் கூறுவதும் ஜனநாயகம் தான். கருணாநிதி முதல்வராக இருந்த போது, அவர் பங்கேற்ற கூட்டத்தில், ‘நடிகர்கள் மிரட்டப்படுகின்றனர்’ என, நடிகர் அஜித் பேசிய போது, கமல் எங்கிருந்தார். அவர், யாருடைய ஊதுகுழலாக உள்ளார். குற்றச்சாட்டை ஆதாரத்துடன் கூறினால், பதில் தர தயார்.

அமைச்சர் ராஜு: ஏதோ பேசிவிட்டார்; அவரை, ஸ்டாலின் வரவேற்றுள்ளார். எங்களை குற்றம் சொல்வோரை, ஸ்டாலின் வரவேற்பது ஆச்சர்யம் அல்ல. கமல், நாலாந்திர பேர்வழி போல் பேசுவது சரியல்ல.இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்கு பன்னீர் ஆதரவு:
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: ஜனநாயகத்தில், ஒரு ஆட்சி குறித்து கருத்து கூற, அனைவருக்கும் உரிமை உண்டு. அந்த வகையில், கமல், தன் கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்காக, அவரை எதிர்ப்பது சரியல்ல. ஆளும் கட்சியினர், இந்த ஆட்சியை வழிநடத்துவதில், மெத்தனப்போக்குடன் நடந்து கொள்கின்றனர்.

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி: ஜனநாயக நாட்டில், எந்த குடிமகனுக்கும், ஆட்சியை விமர்சிக்கும் முழு உரிமை உண்டு. கமல் இந்த ஆட்சியை, விமர்சனம் செய்துள்ளார். அவரது விமர்சனத்தை ஆட்சியாளர்கள் பொறுமையாக கேட்டறிந்து, உரிய பதிலை தர வேண்டும். ஆட்சியாளர்கள் கோபப்படுவது, இயற்கைக்கு, அரசியல் தர்மத்திற்கு மாறான செயல். ஒருவர் குறை சொல்லும் போது, அதற்கு பதில் கூற வேண்டும். தனிப்பட்ட முறையில், விமர்சிக்கவோ, பழிக்கவோ கூடாது. கமலை குறை கூறினால், அவர்களின் மரியாதை தான் குறையும்.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, வி.சி., தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் போன்றோரும், கமலுக்கு ஆதரவும், அமைச்சர்களின் மிரட்டலுக்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.