மனித பிரமிடு அமைப்பது சாகச விளையாட்டா?’
மனித பிரமிடு அமைக்கும், ‘தஹி ஹண்டி’ எனப்படும், உறியடி விழாவை, சாகச விளையாட்டு என, வகைப்படுத்தியதற்கான காரணங்களை கூறும்படி, மஹாராஷ்டிர அரசுக்கு, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., – சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், மனித பிரமிடு அமைக்கும், தஹி ஹண்டி விழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும். அதில், சிறுவர்கள் பங்கேற்கக் கூடாது என்றும், 20 அடி உயரத்துக்கு மேல், மனித பிரமிடு அமைக்கக் கூடாது என்றும், 2015ல், மும்பை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், அதே ஆண்டு, ஆக., 11ல், மாநில அரசு, தஹி ஹண்டி விழாவை, சாகச விளையாட்டாக அறிவித்து, கோர்ட், விதிகள் பலவற்றை தளர்த்தியது. அதன்படி, 11 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களும், தஹி ஹண்டி போட்டியில் பங்கேற்கலாம்; அவர்களின் பெற்றோர், அனுமதிக் கடிதம் தந்தால் போதும் என, மஹாராஷ்டிர அரசு தீர்மானம் நிறைவேற்றியது.
இதை எதிர்த்து, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட் உத்தரவை மாநில அரசு மீறியுள்ளதாக, அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், தஹி ஹண்டி, சாகச விளையாட்டு என, வகைப்படுத்தியதற்கான காரணங்களை கூறும்படி, மஹாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இத்தகைய விளையாட்டில், சிறுவர்கள் எவ்வாறு பங்கேற்க முடியும் என்றும், கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. இந்த வழக்கு, ஆக., 4க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.