Breaking News
அண்டார்டிகாவில் திருமணம்: பிரிட்டன் ஜோடி அசத்தல்

பிரிட்டனை சேர்ந்த காதல் ஜோடிகளான செயில்வெஸ்டர் மற்றும் ஜூலி ஆகியோர், கடும் குளிர் நிலவும் அண்டார்டிகாவில், முதன் முதலாக திருமணம் செய்து சாதனை படைத்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், செயில்வெஸ்டர், 35 மற்றும் ஜூலி, 34, ஆகியோர், 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்துள்ள இவர்கள், அண்டார்டிகாவின் அடிலாய்டு தீவில் உள்ள பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

கடும் குளிர் நிலவும் அண்டார்டிகாவில், தங்கள் திருமணத்தை நடத்த அவர்கள் விரும்பினர். இதற்காக, தங்கள் அலுவலக நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அனுமதி பெற்றனர். அவர்கள் விருப்பபடி, அண்டார்டிகா ஆய்வு மையத்திலேயே திருமணம் நடந்தேறியது. உடன் பணியாற்றும் ஊழியர்கள், 16 பேர் திருமணத்தில் விருந்தினர்களாக பங்கேற்றனர். இதன் மூலம் அண்டார்டிகாவில் நடந்த முதல் திருமணம் என்ற பெருமை, இந்த திருமணத்துக்கு கிடைத்தது.

இது குறித்து மணப்பெண் ஜூலி கூறியதாவது: குளிர்ந்த பனி மலையும், பனிப்பொழிவும் உள்ள அண்டார்டிகா பகுதி, எங்கள் இருவருக்குமே விருப்பமான இடம். எனவே, அங்கு திருமணம் செய்ய முடிவு செய்தோம். எங்கள் திருமணத்திற்கு குறைவான நபர்களை மட்டும் அழைத்தால் போதும் என எண்ணினோம்.
ஆனால், எங்களுடன் பணியாற்றும் சிலரை தவிர, மற்றவர்களை திருமணத்திற்கு அழைக்க முடியாத இடத்தில், எங்கள் திருமணம் நடந்துள்ளது. பூமியில் யாரும் எளிதில் அணுக முடியாத பகுதியில் எங்கள் திருமணம் நடந்தேறியது இருவருக்கும் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.