தனி மனித சுதந்திரம் உரிமையா?: ஆதார் வழக்கில் 9 நீதிபதிகள் அமர்வு விசாரணை
தனி மனித சுதந்திரம் என்பது அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையா என்பது குறித்து, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, இன்று(ஜூலை 19) முதல் விசாரிக்க உள்ளது.
ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் அரசாணைகளை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
வெவ்வேறு தீர்ப்பு :
அதில், ‘ஆதார் என்பது, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள தனிமனித சுதந்திரத்தை மீறுவதாக உள்ளது’ என, ஒரு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரலாக இருந்த, முகுல் ரோஹத்கி, இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே அளித்த இரண்டு வெவ்வேறு தீர்ப்புகளை சுட்டி காட்டினார்.
கடந்த, 1950ல், எட்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பிலும், 1960ல், ஆறு நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பிலும், தனிமனித சுதந்திரம் என்பது, ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை அல்ல என்று கூறப்பட்டு உள்ளன. இந்த தீர்ப்பை, மிகப் பெரிய அமர்வு விசாரிக்க வேண்டும் என, சுட்டிக் காட்டப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி, கேஹர் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
இன்று விசாரணை :
அப்போது, தனிமனித சுதந்திரம், அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றா என்பது குறித்து, ஒன்பது நீதிபதிகள் அமர்வு, இன்று முதல் விசாரிக்கும் என, அறிவிக்கப்பட்டது.