கமல்ஹாசனுக்கு அமைச்சர்கள் கண்ணியத்தோடு பதில் சொல்லி இருக்க வேண்டும்
அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– அமைச்சர்கள் குறித்து கமல்ஹாசன் கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:– கமல்ஹாசன் தனது எண்ணத்தை சொல்லியிருக்கிறார். அவருக்கு எங்களுடைய அமைச்சர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள்.
கேள்வி:– ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், உடல்நிலை சரியில்லாத நிலையில் கருணாநிதி இருப்பதால் தமிழக அரசியலில் வெற்று இடம் ஏற்பட்டு இருப்பதால், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு பிரவேசம் செய்கிறார்களா?
பதில்:– அரசியலில் வெற்று இடம் ஏற்பட்டு இருப்பதாக அவரவர் நினைக்கலாம். வெற்று இடம் இருக்கா? இல்லையா? என்பதை எதிர்காலத்தில் நடைபெற உள்ள தேர்தல்கள் முடிவு சொல்லும்.
கேள்வி:– ‘மழைக்காலத்தில் முளைத்த காளான் வெயில் காலத்தில் காய்ந்துவிடும்’ என்று கமல்ஹாசன் கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:– கமல்ஹாசன் ஒரு சிறந்த நடிகர். பிரபலமான அவர் அரசாங்கத்தை பற்றி கருத்து கூறியிருக்கிறார். அதற்கு அவருக்கு சுதந்திரமும், உரிமையும் இருக்கிறது. அதேநேரத்தில் அவர் காழ்ப்புணர்ச்சியோடு சொல்லி இருக்கிறாரோ, சுய விருப்பு, வெறுப்போடு சொல்லியிருக்கிறாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல், பொதுவாக அவர் எல்லா துறைகளிலும் ஊழல் பெருகிவிட்டது என்று தொனியில் சொல்லியிருப்பதை அவர் ஆதாரங்களுடன் சொல்லி இருக்கலாம். அதே நேரத்தில் அவரை எதிர்கொள்ளவேண்டிய அமைச்சர்கள் கண்ணியத்தோடு ஒருமையில் பதில் கூறாமல், விமர்சனங்களை தகுந்த முறைப்படி அணுகியிருக்கவேண்டும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கற்று தந்த பாதையிலே கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை காத்து பதில் சொல்லி இருந்தால், இதுபோன்ற நிகழ்வு வந்திருக்காது.
கேள்வி:– சசிகலாவுக்கு சிறைச்சாலையில் வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது. இது அரசியல் உள்நோக்கம் உள்ள நடவடிக்கையா?
பதில்:– மடியில் கனம் இல்லை என்பதால் எங்களுக்கு வழியில் பயம் இல்லை. ‘ஷாப்பிங்’ சென்று வந்ததாக தவறாக ஒளிப்பரப்புகிறார்கள். நாளை(இன்று) சசிகலாவை சிறைச்சாலைக்கு சென்று பார்க்க உள்ளேன்.
அதிகாரிகளுக்கு இடையிலான போட்டியிலோ, அவர்களுக்குள் இருக்கும் விவகாரத்திலோ அறிக்கை கொடுத்திருக்கலாம். இதை எங்கள் எதிரிகள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனது பெயரையும் இழுத்து விட்டிருக்கிறார்கள். தவறான செய்திகளை போடுபவர்கள் மீது அவதூறு வழக்கு போடப்படும்.
எல்லா சிறை கைதிகளுக்கும் செய்துகொடுக்கப்பட்டுள்ள, வசதிகள், சலுகைகள் தான் அவர்களுக்கும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. அந்த டி.ஜி.பி.யை நாங்கள் யாரும் சந்தித்தது கூட இல்லை. பணம் கொடுத்து சலுகை பெறவேண்டிய அளவுக்கு அங்கு நிலைமை இல்லை. இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.