டிரம்ப் – புடின் ரகசிய பேச்சு அமெரிக்காவில் பெரும் சர்ச்சை
சமீபத்தில், ஜெர்மனியில் நடந்த, ஜி – 20 நாடுகள் மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரகசியமாக பேச்சு நடத்தியது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், இந்த ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றார். முன்னதாக, அதிபர் பதவிக்காக நடந்த தேர்தலின்போது, ரஷ்யா தலையிட்டு, மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. ரஷ்ய அதிபருக்கும், டிரம்ப்புக்கும் இடையே மறைமுக உறவு உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், ஜெர்மனியில் சமீபத்தில், ஜி – 20 நாடுகளின் மாநாடு நடந்தது. அப்போது, டிரம்ப் – புடின் இடையே, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி சந்திப்பு நடந்தது. இந்த மாநாட்டையொட்டி, உலகத் தலைவர்களுக்கு, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல் விருந்து அளித்தார். அதில், உலகத் தலைவர்கள், தங்கள் மனைவி அல்லது கணவருடன் பங்கேற்றனர்.
இந்த விருந்தின்போது, அமெரிக்க அதிகாரிகள், மொழி பெயர்ப்பாளர் யாரும் இல்லாத நிலையில், புடினுடன், டிரம்ப் நீண்ட நேரம் ரகசியமாக பேசியதாக, அமெரிக்க பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது; இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: விருந்து நிகழ்ச்சியில், ஜப்பான் பிரதமரின் மனைவி மற்றும் அர்ஜென்டினா அதிபரின் மனைவிக்கு இடையில், டிரம்ப் அமர்ந்திருந்தார். அதனால், அவருடன், ஜப்பான் மொழி தெரிந்த அமெரிக்க மொழி பெயர்ப்பாளர் உடனிருந்தார்; அவருக்கு ரஷ்ய மொழி தெரியாது.
அதே நேரத்தில் டிரம்ப்பின் மனைவி, ரஷ்ய அதிபர் புடினுக்கு அருகில் அமர்ந்திருந்தார். அமெரிக்க ஆங்கிலம் தெரிந்த ரஷ்ய மொழி பெயர்ப்பாளர், புடினுக்கு உதவியாக இருந்தார். விருந்தின்போது, ஒவ்வொருவரும் மற்ற நாட்டு தலைவர்களுடனும் பேசினர். அப்போது, புடினுடன், அதிபர் டிரம்ப், சில வார்த்தைகளை பேசினார். மற்றபடி, ரகசிய பேச்சு ஏதும் நடக்கவில்லை. இவ்வாறு அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
புடின் – டிரம்ப் இடையே ஏற்கனவே சிறந்த நட்பு உள்ள நிலையில், இருவரும் ரகசியமாக பேசியது, அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.