Breaking News
கமல்ஹாசனை அரசுக்கு எதிரானவராக  நினைக்கக் கூடாது: பார்த்திபன்

கமல்ஹாசனை அரசுக்கு எதிரானவராக நினைக்கக் கூடாது என்று நடிகர், இயக்குநர் பார்த்திபன் கூறியுள்ளார்.

சமீப காலமாக தமிழக அரசை கடுமையாக சாடி வருகிறார் கமல். தமிழக அமைச்சர்கள் பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். கமலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆதரவுக் குரல் கொடுத்து வருகிறார்கள். கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையால் மேலும் சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில் கமலின் அறிக்கை மற்றும் தற்போதைய பேச்சுகள் குறித்து பார்த்திபனிடம் கேட்ட போது:

நேற்று ஒரு கல்லூரிக்குப் போயிருந்தேன். அங்கே ஒரு மாணவி, ‘நீங்க எப்போ அரசியல் களத்துக்கு வருவீங்க?’ என்று கேட்டார். என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி வைக்கப்படும்போது கமல்ஹாசனிடம் இந்த கேள்வியை எல்லோரும் கேட்கத்தான் செய்வார்கள். காரணம், இங்கே அப்படி ஒரு தேவை இருக்கிறது. எல்லா விஷயங்களும் பூர்த்தியாக இருந்தால் இந்தமாதிரி கேள்விகளை இளைஞர்கள் கேட்க அவசியம் இருக்காது.

கமல்ஹாசன் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கூட எதையும் மறைத்து வைக்க மாட்டார். சினிமாவில் நிறைய புதுமைகளை செய்தவர். அவர் தொடும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் அர்த்தம் இருக்கும் என்று எல்லோரும் நம்புகிறார்கள். அதேபோல, சினிமாவில் வருமான வரியை சரியாகக் கட்டக்கூடியவர்.

அதனால்தான் சமீபத்திய அவரது அறிக்கையில்கூட அதுகுறித்து துணிச்சலோடு கேள்வி கேட்க முடிகிறது. அதை நாமும் வரவேற்க வேண்டும். இந்த மாதிரி தனித்த துணிவோடு அவர் குரல் கொடுப்பது நல்ல விஷயம். இப்படி அவர் பேசுவதால் அரசுக்கு எதிரானவர் என்று நினைக்கக் கூடாது. அரசுக்கு எதிராக ஒரு தகவல் வரும்போது அதை ஒருவர் பதிவு செய்யும்போது அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் பொருமையாக பதில் சொல்ல வேண்டும். அதுதான் அவர்களது கடமை.

சினிமாவில் கேளிக்கை வரி விஷயத்தில் அவ்வளவு லஞ்சம் இருப்பது உண்மை. ஒரு பெரிய நடிகரின் படம் யூ சான்றிதழ் பெறுகிறது என்றால் அதில் எவ்வளவு லஞ்சம் பரிமாற்றம் இருந்தது என்பது இங்கே எல்லோராலும் பேசப்படுகிற ஒரு விஷயம்தான். இதையெல்லாம் வைத்துதான் அவரது ஊழல் குறித்த அந்த அறிக்கை இருந்தது.

கமல்ஹாசன் இப்படி பேசியதை நாமும் பின் தொடர வேண்டும். இப்படி கேள்வி கேட்டதும் அவர் அரசியலுக்கு வரப் போகிறார் என்பதை கடந்து இப்படி கேள்வி கேட்போம் என்ற பார்வையை ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கிறேன்’’ என்று பார்த்திபன் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.