லியான் தனித்துவமானவர்தான்!
இங்கிலாந்தைச் சேர்ந்த 18 வயது லியாம் டெர்பிஷிர் தூங்க ஆரம்பித்தால் மூச்சு விடுவதை நிறுத்திவிடுகிறார். பிறவிக் குறைபாட்டுடன்தான் பிறந்தார் லியாம். குழந்தை தூங்க ஆரம்பித்தால் மூச்சு நின்றுவிடும். அதனால் செயற்கை சுவாசம் கொடுத்து வைத்திருந்தார்கள் மருத்துவர்கள். இந்தக் குழந்தை கருவிலேயே இறந்துவிடும் என்று கணித்திருந்த மருத்துவர்களுக்கு உயிருடன் பிறந்ததில் ஆச்சரியம். ஆனாலும் 6 வாரங்களுக்கு மேல் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டனர். குழந்தை இருக்கும் வரை பத்திரமாகப் பார்த்துக்கொள்வது என்று முடிவு செய்தனர் லியானின் பெற்றோர். “கதைகளில் சாபம் விட்டால் இப்படிப் பிரச்சினை வரும் என்று படித்திருக்கிறோம். ஆனால் நிஜ வாழ்வில் இப்படி ஒரு நோய் மருத்துவ உலகத்துக்கே சவாலாக இருக்கிறது. உலகம் முழுவதும் 1500 பேர் இந்த நோயால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் லியானின் நிலைமைதான் மிகவும் தீவிரமாக இருக்கிறது. விழித்துக்கொண்டிருக்கும்போது சுவாசக் கருவிகள் இன்றி அவனால் இருக்க முடியும். லேசாகத் தூங்க ஆரம்பித்தால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். அதனால் வீட்டிலேயே மருத்துவமனை போன்று மருத்துவக் கருவிகளைப் பொருத்தியிருக்கிறோம். இதுவரை சுவாசக் கருவிகள் இன்றி அவன் தூங்கியதில்லை. 24 மணி நேரமும் ஒரு செவிலியரை அமர்த்தியிருக்கிறோம். லியான் தூங்கும்போது அடிக்கடி கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். 6 வாரங்களுக்கு மேல் இருக்க மாட்டான் என்று சொன்ன எங்கள் மகன், 18 ஆண்டுகள் வரை வந்துவிட்டான் என்பதில் எங்களுக்கு அளவற்ற சந்தோஷம். ஒவ்வொரு நாளையும் அவனுக்குக் கிடைத்த போனஸாகவே நினைத்துக்கொள்கிறோம். மற்ற குழந்தைகள்போல இயல்பான வாழ்க்கை அமையாவிட்டாலும் லியான் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பான், நாங்களும் எங்களால் முடிந்த அளவுக்கு அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறோம். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், இடையில் புற்றுநோயும் வந்தது. அதையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுவிட்டான் லியான்” என்கிறார் அம்மா கிம். லியானைத் தொடர்ந்து கவனித்து வரும் மருத்துவர் கேரி கோனெட், “இந்தக் குறைபாடு உடையவர்கள் யாரும் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததில்லை. லியான் விஷயத்தில் எல்லாமே ஆச்சரியமாக இருக்கிறது. உலகத்திலேயே லியான் தனித்துவமானவர்” என்கிறார்.
லியான் தனித்துவமானவர்தான்!
கொலம்பியாவைச் சேர்ந்த விமானப்படை வீரர்கள் சியாரா என்ற பெல்ஜிய மாலினோய்ஸ் வகை நாய்க்குச் சிறப்பு பயிற்சிகளை அளித்து வருகிறார்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதற்காகவே இந்த நாய்க்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 14 ஆயிரம் அடி உயரத்திலிருந்து பாராசூட்டில் தலைமைத் தொழில்நுட்ப வல்லுநர் கார்லோஸ் ஆண்ட்ரெஸுடன் சேர்ந்து குதித்தது சியாரா! ஏற்கெனவே 4 முறை இதுபோன்று வானிலிருந்து குதித்திருந்தாலும், அன்று பயிற்சியின் கடைசி நாள் என்பதால், பிரபல புகைப்படக் கலைஞரை வைத்துப் படம் பிடித்திருக்கிறார்கள்!