அனைத்து வகுப்புகளிலும் பயணம்: ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவு
‘ரயில் பயணியரின் குறைகளை நேரில் தெரிந்து கொள்ளும் வகையில், அனைத்து வகுப்பு பெட்டிகளிலும் பயணம் செய்ய வேண்டும்’ என, ரயில்வே உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரயில்வேயின் பல்வேறு சேவைகளின் தரம் குறித்த புகார்கள், சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. ரயிலில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை; படுக்கை சுத்தமாக இல்லை என்பது போன்ற புகார்கள், அதிகரித்து வருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், புதிய நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து, ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில்வே வாரிய உறுப்பினர்கள், பொது மேலாளர்கள், மண்டல பொது மேலாளர்கள் போன்ற உயரதிகாரிகள், ‘ஏசி’ வகுப்பில் தான் பயணம் செய்வர். இந்த அதிகாரிகள் அனைத்து வகுப்பு பெட்டிகளிலும் பயணம் செய்ய வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, நீண்டதுார ரயிலில் பயணம் செய்யும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது. அவ்வாறு பயணம் மேற்கொள்ளும்போது, பயணியரின் குறைகள் என்ன என்பதை நேரில் பார்த்து, தெரிந்து கொள்ள முடியும். அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுப்பதற்கு, அவர்கள் பரிந்துரை செய்ய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.