நியூயார்க் தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாரி ஒன்றை ஓட்டி வந்த மர்ம நபர் அதனை உலக வர்த்தக மைய நினைவகம் அருகே பொதுமக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இந்த தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தினை அடுத்து தப்பியோட முயன்ற அவரை போலீசார் சுட்டு பிடித்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் பெயர் சேபுல்லோ சாய்போவ் என தெரிய வந்தது. அவரிடம் இருந்த போலி துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது ஒரு தீவிரவாதத்தின் கோழை செயல் என நியூயார்க் நகர மேயர் பில் டீ பிளேசியோ கூறியுள்ளார். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு எனது நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், நியூயார்க் தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நியூயார்க் நகர தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் குணமடைய இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.