இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் விசாரணை 6–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற ஒருங்கிணைந்த ஆளும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கும், சசிகலா அணியினருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் நடந்து வரும் வழக்கு நீண்டு கொண்டே போகிறது. ஏற்கனவே 4 கட்ட விசாரணை நடந்து முடிந்த நிலையில் நேற்று 5–ம் கட்ட விசாரணை நடைபெற்றது.
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே.ஜோதி முன்னிலையில் நேற்று மாலை 3 மணிக்கு விசாரணை தொடங்கியது. இந்த விசாரணையில் ஆளும் கட்சி அணி சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ் மற்றும் டாக்டர் மைத்ரேயன் எம்.பி., டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சசிகலா அணி தரப்பில் தங்க தமிழ்செல்வன் உள்பட தகுதிநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரு அணிகள் சார்பிலும் வக்கீல்கள் கலந்து கொண்டு தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
விசாரணை தொடங்கியதும் சசிகலா தரப்பு வக்கீல் விஜய் அன்சாரியா தனது வாதங்களை முன் வைத்தார். இவரது விவாதம் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனைத்தொடர்ந்து அதே அணியைச் சேர்ந்த அபிஷேக் மனு சிங்வி வாதம் செய்தார். மொத்தமாக இந்த வாதங்கள் 3 மணிநேரத்துக்கும் மேல் நீடித்து, மாலை 6.10 மணிக்கு முடிவுக்கு வந்தது.
சசிகலா தரப்பில், கடந்த ஆண்டு டிசம்பர் 26–ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் குறிப்புக்கள் வாசிக்கப்பட்டன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா பொதுச்செயலரளாக நியக்கப்பட்டது குறித்தும் விளக்கப்பட்டது. தற்போது நடைபெற்றதாக கூறப்படும் அணி இணைப்புக்கு சட்டரீதியான முகாந்திரம் ஏதும் கிடையாது. அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளார் என்ற வாதங்கள் வைக்கப்பட்டன.
ஒருங்கிணைந்த அணியின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி வாதாடுகையில், சசிகலா தரப்பில் வேண்டுமென்றே விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் அடுத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் அவர்களே அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதாகவும், இந்த வழக்கு தொடர்பாக சில சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை வாசிக்கும் போது தங்களுக்கு சாதகமான பகுதிகளை மட்டுமே வாசிப்பதாகவும் அதற்கு அடுத்த பத்தியிலேயே அவர்களுக்கு பாதகமான இருக்கும் விஷயங்களை வேண்டுமென்றே வாசிக்காமல் தவிர்க்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.
அப்போது, தங்கள் வாதங்களை முன்வைக்க சசிகலா தரப்பில் மேலும் அவகாசம் கோரப்பட்டது.
அதனைத்தொடர்ந்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற 6–ந் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்து தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே.ஜோதி உத்தரவிட்டார். எனவே அன்று மீண்டும் விசாரணை நடைபெறும்.