கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்க திட்டமா? மத்திய உணவுத்துறை அமைச்சகம் மறுப்பு
இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றாக இருக்ககூடிய கிச்சடியை, இந்திய அரசு விரைவில் தேசிய உணவாக அறிவிக்க உள்ளதாக வெளியான தகவலை உணவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் 3 தினங்கள் உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நடைபெறும் இந்த உணவு திருவிழாவை மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் ஒருங்கிணைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், கிச்சடியை பிரபலப்படுத்தும் நோக்கில், 800 கிலோ கிச்சடி தயாரிக்கப்படுகிறது.
இதை மையமாகவைத்து கிச்சடியை இந்தியாவின் தேசிய உணவாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, மேற்கண்ட தகவலை மறுத்துள்ள மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல், உலக இந்திய உணவு நிகழ்ச்சியில் கிச்சடியை பிரபலப்படுத்தும் முயற்சியாகவே கடைபிடிக்கப்பட உள்ளதாக விளக்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- கிச்சடி தேசிய உணவு என்ற வதந்தி போதும். கிச்சடி, ‛உலக இந்திய உணவு’ விழாவில் சாதனைக்காக தயாரிக்கப்படுகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.