Breaking News
பவள விழா கொண்டாடும் ‘தினத்தந்தி’க்கு பிரதமர் மோடி வாழ்த்து

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், 1942–ம் ஆண்டு நவம்பர் 1–ந் தேதி மதுரையில் ‘தந்தி’ என்ற பெயரில் தொடங்கிய ‘தினத்தந்தி’ நாளிதழ், இன்று 17 பதிப்புகள் கண்டு, மாபெரும் வளர்ச்சி அடைந்து, 75 ஆண்டுகளை கடந்து தனது வெற்றி பயணத்தை தொடர்கிறது.

உலகமெங்கும் வாழ்கிற தமிழ் மக்களின் வாழ்வோடு இரண்டற கலந்துவிட்ட ‘தினத்தந்தி’யின், பவள விழா, சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கத்தில் 6–ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கி, பவள விழா மலரை வெளியிட்டு, விருதுகள் வழங்கி வாழ்த்தி பேசுகிறார்.

இதையொட்டி ‘தினத்தந்தி’யின் இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

திரு எஸ்.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அவர்களுக்கு,

நாட்டின் முன்னணி தமிழ் நாளிதழ்களில் ஒன்றான ‘தினத்தந்தி’யின் 75–வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில், நான் தலைமை விருந்தினராக பங்கேற்க விடுத்துள்ள உங்களின் அழைப்பு கிடைத்தது. அதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

உங்களது செய்தித்தாள், பல்லாண்டு கால கடின உழைப்பாலும், சமூகத்தின் பலதரப்பட்ட மக்களின் குரல்களை முன்னுக்கு கொண்டு வருவதில் காட்டிய விடா முயற்சியாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் 4–வது தூணாக ஊடகம் விளங்குகிறது. ஜனநாயகத்தில் ஊடகத்துக்கு மிக முக்கிய பங்களிப்பு உண்டு. செய்திகளை சேகரித்து அளிப்பதின் மூலம், சமுதாய மாற்றத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பினை ஊடகம், தனது தோள்களில் சுமக்கிறது.

4–வது தூணின் அங்கம் என்ற வகையில், நமது சமூகத்தின் எண்ணற்ற பிரச்சினைகள் குறித்து உங்களின் ஊடகம், விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

புதிய இந்தியாவை காண வேண்டும் என்ற நமது ஒன்றுபட்ட பார்வை நிறைவேறுவதற்கு, உங்களின் இந்த தொடர் முயற்சிகள் உதவி, பங்களிப்பு செய்யும் என்று நான் நம்புகிறேன்.

அச்சு ஊடகத்தில் முன்னோடியாக இருந்து பங்களிப்பு செய்து வருவதற்காக ‘தினத்தந்தி’ குழுவுக்கு எனது பாராட்டுகள்.

பத்திரிகை துறையில் உங்கள் புகழ்மிக்க செய்தித்தாள், இன்னும் பல்லாண்டு காலம் சீரிய பணியாற்றி சாதனைகள் பல படைத்திட நான் வாழ்த்துகிறேன்.

இனி வருங்காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடைவதற்கு எனது வாழ்த்துகள்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.