இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விமான பயணத்தில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் வழங்க பிசிசிஐ பரிசீலனை
உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் திகழ்கிறது. இருப்பினும், இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளுக்கு விமானத்தில் பயணிக்கும் பொழுது அவர்களுக்கு எகனாமி கிளாஸ் டிக்கெட் வழங்கப்படுகிறது.
எகனாமி கிளாஸில் பயணிக்கும் போது, தனிநபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு போன்றவை பாதிப்புக்குள்ளாவதாகவும் ஹர்திக்பாண்ட்யா, இஷாந்த் சர்மா போன்ற உயரமான வீரர்கள் இருக்கைக்குள் அமர அசவுகரியமாக உணர்வதாகவும் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்திடம் அணி வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், லக்கேஜ் பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாகவும், விமான நிலையங்களுக்குள் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வதாகவும் சில வீரர்கள் புகார் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து, பிசிசிஐ-யின் பொறுப்பு தலைவர் சி.கே. கண்ணா, தன்னுடைய சக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். நடைமுறையை விரைவுபடுத்தவேண்டும் என்றும் கடிதத்தில் சிகே கண்ணா கோரியிருக்கிறார். இதனால் வீரர்களின் உள்நாட்டு பயணங்களில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்வதற்கு தனி விமானத்தை பிசிசிஐ வாங்க வேண்டும் என்றும் இதன்மூலம், கால விரயம் தவிர்க்கப்படும் என்று கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.